28 வாங்கிட்டோம்ன்னு சந்தோஷப்பட வேண்டாம்.. அந்த 28ல்ல எத்தனை ஜெயிக்க போறாங்க, எத்தனையை ஜெயிக்க விடாம பண்ண போறாங்கன்னு தேர்தல் ரிசல்ட்டுக்கு அப்புறம் தான் தெரியும்.. அந்த ஒரு ராஜ்ய சபா சீட் மட்டும் தான் கன்பர்ம்.. ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? அப்படியே வந்தாலும் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஏறுவாரா? கூட்டணி ஜெல் ஆகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..

தமிழக அரசியலில் திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு என்பது வெறும் எண்களை தீர்மானிக்கும் நிகழ்வாக மட்டும் இல்லாமல், பல்வேறு அரசியல் நகர்வுகளையும், திரைமறைவு திருப்பங்களையும் கொண்ட ஒரு பரபரப்பான நாடகமாகவே அரங்கேறியுள்ளது.…

rahul stalin

தமிழக அரசியலில் திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு என்பது வெறும் எண்களை தீர்மானிக்கும் நிகழ்வாக மட்டும் இல்லாமல், பல்வேறு அரசியல் நகர்வுகளையும், திரைமறைவு திருப்பங்களையும் கொண்ட ஒரு பரபரப்பான நாடகமாகவே அரங்கேறியுள்ளது. கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட 25 தொகுதிகளை விட கூடுதலாக 3 தொகுதிகள் பெற்று, மொத்தம் 28 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடத்துடன் இந்த ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. இந்த உடன்பாடு எட்டப்படுவதற்கு முன்பாக, காங்கிரஸின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் திமுக தலைமைக்கிடையே நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகள் கூட்டணியின் உறுதித்தன்மையை சோதிக்கும் வகையில் அமைந்தன. ஆரம்பத்தில் 45 இடங்கள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள், திமுக தலைமையை திகைக்க வைத்ததுடன், இரு கட்சிகளுக்கும் இடையே ஒருவிதமான பனிப்போரை உருவாக்கியது.

குறிப்பாக, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத் சோடாங்கரின் சில அதிரடி நடவடிக்கைகள் திமுகவை அதிருப்தியடைய செய்தன. திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியே வரும்போது, திமுகவின் சலுகைகளை வெளிப்படையாக நிராகரித்ததும், அதே நேரத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை பாராட்டி பேசியதும் கூட்டணியில் விரிசல் விழுகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் இத்தகைய அழுத்தம் கொடுக்கும் தந்திரங்கள், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை கோபப்படுத்தியது. குறிப்பாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு வாழ்த்தும்போது ‘சகோதரர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தாதது, இந்த விரிசலை டெல்லி வரை கொண்டு சென்றது.

இந்த இக்கட்டான சூழலில், கூட்டணியை காப்பாற்ற திமுக தரப்பில் கனிமொழி மற்றும் காங்கிரஸ் தரப்பில் ப. சிதம்பரம் ஆகியோர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. ராகுல் காந்தி ஆரம்பத்தில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்குவதில் உறுதியாக இருந்தபோதும், தமிழகத்தின் கள நிலவரத்தையும் திமுகவின் பலத்தையும் உணர்ந்திருந்த சோனியா காந்தி, கூட்டணி உடையக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். ப. சிதம்பரம் நேரடியாக முதல்வரை சந்தித்து பேசியது மற்றும் கனிமொழி டெல்லியில் ராகுல் காந்தியுடன் நடத்திய ஆலோசனைகள் இறுக்கமான சூழலை தளர்த்தின. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, 30 இடங்களுக்கு கீழ் இறங்கி வராத காங்கிரஸை 28 இடங்களுக்கு ஒப்புக்கொள்ள வைப்பதில் திமுக தலைமை வெற்றி பெற்றது.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தான விதம் பல்வேறு சுவாரசியமான பின்னணிகளைக் கொண்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் சென்னை வருவதாக இருந்து, பின்னர் கடைசி நிமிடத்தில் அவர் வராதது பல யூகங்களை உருவாக்கியது. ராகுல் காந்தியின் முழுமையான விருப்பம் இல்லாமல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதா அல்லது உள்ளூர் தலைவர்களின் அழுத்தம் காரணமாக இது நடந்ததா என்ற கேள்விகள் இன்னும் நீடிக்கின்றன. சோடாங்கர் போன்ற தலைவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் அதிருப்தி இருப்பதை வெளிப்படையாகவே பதிவு செய்தனர். ஆனாலும், பாஜக என்ற பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் இரு கட்சிகளையும் மீண்டும் ஒரு புள்ளியில் இணைத்தது.

இந்த தொகுதிப் பங்கீட்டில் மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், தேமுதிக மற்றும் விசிக போன்ற கட்சிகளுடனான திமுகவின் அணுகுமுறை ஆகும். தேமுதிகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படலாம் என்ற செய்திகள் வந்தபோது, அதை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் தனது பேர வலிமையை அதிகரிக்க முயன்றது. காங்கிரஸ் தனது வாக்கு சதவீதம் மற்றும் கடந்த கால வெற்றிகளை முன்வைத்து வாதிட்ட நிலையில், திமுகவோ தற்போதைய கள எதார்த்தம் மற்றும் கூட்டணி கட்சிகளின் பலத்தை வைத்தே இடங்களை பிரித்துக் கொடுத்தது. இறுதியில், ஒரு ராஜ்யசபா சீட் என்ற வாக்குறுதி காங்கிரஸை திருப்திப்படுத்த உதவியது. இது ஒருவகையில் காங்கிரஸின் டெல்லி தலைமையையும், தமிழக மாநில தலைமையையும் சமரசம் செய்ய எடுக்கப்பட்ட முடிவாக பார்க்கப்படுகிறது.

தற்போது கூட்டணி உறுதியாகிவிட்டாலும், அடிமட்ட தொண்டர்களிடையே இந்த தொகுதி பங்கீடு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் அடுத்த சவாலாகும். 22 ஆண்டுகால நீண்ட கால உறவு இருந்தாலும், தொகுதிகளை விட்டு கொடுப்பதில் அந்தந்த மாவட்ட திமுக நிர்வாகிகள் காட்டும் தயக்கம் தேர்தல் பணிகளில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளபடி, மீண்டும் ஆட்சி என்ற இலக்கை அடைய இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதிகாரம் மற்றும் தொகுதிகளுக்காக தொடங்கிய இந்த போராட்டம், இப்போது தேர்தல் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த ‘ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ்’ நிறைந்த கூட்டணி உடன்பாடு வரவிருக்கும் தேர்தலில் எந்த மாதிரியான வெற்றியை தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.