ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி கிடந்த எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது குறித்து இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது, இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டிருக்கும் மென்மையான மாற்றத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள அதிகாரிகளின் கூற்றுப்படி, இமயமலை எல்லையில் உள்ள குறிப்பிட்ட வர்த்தக மையங்களை மீண்டும் திறப்பது குறித்து இரு நாடுகளும் ரகசியமாக பேசி வருகின்றன. சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து, “இந்தியாவுடனான எல்லை வர்த்தகம் இரு நாடுகளின் எல்லை பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் நீண்டகாலமாக முக்கிய பங்காற்றியுள்ளது. இதில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியா – சீனா இடையே மசாலாப் பொருட்கள், கம்பளங்கள், மரச்சாமான்கள், கால்நடைத் தீவனம், மட்பாண்டங்கள், மூலிகைச் செடிகள், மின்சாதனப் பொருட்கள் மற்றும் கம்பளி ஆடைகள் ஆகியவை வர்த்தகம் செய்யப்பட்டன.
2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்த வர்த்தக பாதைகள் மூடப்பட்டன. மேலும் அதே ஆண்டில், இமயமலை எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களும், நான்கு சீன வீரர்களும் கொல்லப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்தன.
இந்த நிலையில் எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை, உறவுகளை புதுப்பிக்க பரந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் அடுத்த மாதம் மீண்டும் தொடங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா, இந்தியாவுக்கு சில உர ஏற்றுமதிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு, பதற்றத்தை குறைப்பதற்காக சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் இருந்து இராணுவப் படைகளை விலக்கிக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் சீனாவுக்கு பயணம் செய்யவுள்ளார். அப்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இருதரப்பு சந்திப்பு நடத்த வாய்ப்புள்ளது. இந்த சந்திப்புக்கு பின் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், இந்தியா – சீனா உறவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. எல்லை வர்த்தகத்தை மீண்டும் திறப்பது, இமயமலை பிராந்தியத்தில் உள்ள சமூகங்களுக்கு ஒரு முக்கியமான பொருளாதார ஊக்கத்தை அளிக்கும். அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், சீனாவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது இந்தியாவுக்கு ஒரு மாற்று வழியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
