உலகின் முன்னணி செஸ் வீரரான கார்ல்சன் அணிந்த மறக்க முடியாத ஜீன்ஸ் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது. அது எவ்வளவு லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது என்பதைக் காணலாம்.
2024ஆம் ஆண்டு நடந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், கார்ல்சன் கலந்து கொள்ள வந்தபோது, போட்டியின் விதிகளுக்கு முரணாக ஜீன்ஸ் அணிந்திருந்தார். இதனை கருத்தில் கொண்டு, நடுவர் அவரை எச்சரித்து அபராதம் விதித்தார். மேலும், உடனே ஜீன்ஸை மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், கார்சன் அதை மறுத்து, “நாளை வந்து நான் போட்டியிலும் விளையாடிக் கொள்கிறேன்” என்று கூறி சென்றுவிட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மறுநாள், நடுவர்கள் அவரை போட்டியில் பங்கேற்க அனுமதித்த நிலையில், கார்சன் போட்டியிலிருந்து வெளியேறினார். அதுமட்டுமின்றி, போட்டியின் நிர்வாகிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த சர்ச்சைக்குரிய நாளில் அவர் அணிந்த ஜீன்ஸ் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது. இதைப் பற்றி கார்ல்சன் கூறியபோது, அவர், “சர்ச்சைக்குரிய நாளில் நான் அணிந்திருந்த ஜீன்ஸை ஏலம் விடலாம் என்ற வேடிக்கையான யோசனை திடீரென தோன்றியது. மேலும், அதில் கிடைக்கும் முழு தொகையையும் நன்கொடை அளிக்க விரும்புகிறேன். இதனால், இந்த ஜீன்ஸை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.
தற்போதைய டிரெண்டில் இருக்கும் சிறந்த ஜீன்ஸ்களில் ஒன்றாக இருக்கும் இந்த ஜீன்ஸ், நிச்சயம் நல்ல விலைக்கு போகும் என்றும் அவர் எதிர்பார்த்தார். ஏலம் தொடங்கியபோது, முதலில் 12 லட்சத்துக்கு ஏலம் உறுதி செய்யப்பட்டது. ஆனால், படிப்படியாக ஏலத் தொகை உயர்ந்து, முப்பது நிமிடங்களில் சுமார் 31 லட்சத்துக்கு அதிகமாக ஏலம் போனது.
ஏலத்தை எடுத்த நபர் தன்னை அடையாளம் காட்ட விரும்பவில்லை என்பதால், அவரது விவரங்கள் வெளியிடப்படவில்லை. கார்ல்சன் அணிந்த இந்த ஜீன்ஸ் 31 லட்சத்துக்கு ஏலம் போனது, மேலும் ஒரு பரபரப்பை உருவாக்கியுள்ளது.