CBSE பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
CBSE இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், விரிவான பாடத்திட்ட விவரங்கள் சிபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (cbseacademic.nic.in) இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடத்திட்டம் புதிய கல்வி முறை, தேர்வு மாதிரி உள்ளிட்ட தெளிவான வழிகாட்டுதலை கொண்டிருக்கிறது என்றும், கல்வி தரத்தை மேம்படுத்த இந்த புதிய பாடத்திட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் CBSE கல்வித்துறை இயக்குனர் டாக்டர் பிரக்யா எம். சிங் தெரிவித்துள்ளார்.
இந்த பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும், இந்த புதிய பாடத்திட்டம் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடிப்படை கல்வி முதல் ஆராய்ச்சி சார்ந்த கல்வி வரை, தொழில்நுட்ப ஒருங்கிணைப்புடன் மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் CBSE தெரிவித்துள்ளது.
எனவே, அடுத்த ஆண்டு முதல் CBSE பள்ளிகளில் படிக்கும் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அமலாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அடுத்த ஆண்டிலிருந்து CBSE 10ஆம் வகுப்பு பொது தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என்றும், இரண்டு தேர்வுகளையும் எழுதும் மாணவர்கள் எதில் அதிக மதிப்பெண் பெற்றார்களோ அந்த மதிப்பெண்ணை வைத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.