தமிழக அரசியலில் தற்போது ‘கரூர் சம்பவம்’ மற்றும் அதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானது ஆகியவை பெரும் விவாத பொருளாக மாறியுள்ளன. சில நாட்களுக்கு முன்பு கரூரில் நடைபெற்ற அந்த துரதிர்ஷ்டவசமான நெரிசல் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியானது ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரித்து வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது சிபிஐ வசம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் ஒரு பகுதியாக ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளது அரசியல் களத்தில் ஒரு பிரேக் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
சிபிஐ விசாரணை என்பது வழக்கமான சட்ட நடைமுறை என்றாலும், ஒரு வளர்ந்து வரும் அரசியல் கட்சித் தலைவர் தேர்தல் நெருங்கும் நேரத்தில் விசாரணைக்கு அழைக்கப்படுவது பலவிதமான யூகங்களை எழுப்புகிறது. முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக ஏடிஜிபி உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகளிடமும், சம்பவ இடத்தில் இருந்த பஸ் டிரைவர் முதல் பாதுகாவலர்கள் வரை பலரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. மற்றவர்களின் வாக்குமூலங்களை கொண்டு விஜய்யிடம் சுமார் 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அடிப்படையில், இதுவும் ஒரு வழக்கமான நடைமுறை என ஒரு சாரார் குறிப்பிட்டாலும், இது விஜய்யின் அரசியல் வாழ்வின் இடையூறாக, ஒரு தவிர்க்க முடியாத நாளாக மாறிவிட்டது.
கரூர் சம்பவம் விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு பின்னடைவா அல்லது ஒரு புதிய வேகத்தை கொடுக்குமா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஆரம்பத்தில் இந்த துர்சம்பவத்திற்காக விஜய் மீது மக்கள் கோபமாக இருந்தாலும், போகப்போக அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு முக்கிய காரணம் என்கிற பிம்பம் அனுதாப அலையாக அவர் பக்கம் திரும்பியது. குறிப்பாக, கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியது யார், லோக்கலில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதா போன்ற கேள்விகள் எழுகின்றன.
அரசியல் கணக்குகளை பொறுத்தவரை, விஜய்யை வளைக்க அல்லது முடக்க மத்திய அரசு சிபிஐயை பயன்படுத்துகிறதா என்கிற சந்தேகம் ஒருபுறம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், கள நிலவரப்படி விஜய் எடுக்கும் ஒவ்வொரு வாக்கும் திமுகவின் வாக்கு வங்கியில் இருந்தே அதிகம் பிரியக்கூடும் என்பதால், விஜய்யின் வளர்ச்சியை பாஜக மறைமுகமாக ஆதரிக்கக்கூடும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். விஜய்யை ஒரு மாற்று சக்தியாக அடையாளப்படுத்துவது பாஜகவிற்கு சாதகமாகவே அமையும் என்பதால், தேர்தல் நேரத்தில் அவரை விசாரணை என்ற பெயரில் முடக்கி, மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க பாஜக விரும்பாது என்பதே பொதுவான கணிப்பு. இருந்தபோதிலும், சீட் பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விசாரணை அரசியல் ரீதியாக அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த பரபரப்பான சூழலில், சென்சார் போர்டு முதல் சிபிஐ வரை அடுத்தடுத்து விஜய் தொடர்பான விவகாரங்கள் செய்திகளில் அடிபடுவது, அவரை ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக முன்னிறுத்தியுள்ளது. ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், ஒரு தலைவராக சட்டச் சிக்கல்களை அவர் எப்படிக் கையாள்கிறார் என்பதைக் கொண்டே மக்கள் அவருக்கு வாக்களிப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பார்கள்.
முடிவாக, சிபிஐ விசாரணைக்கு பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை இந்த வழக்கின் உண்மைத்தன்மை ரகசியமாகவே இருக்கும். இன்றைய விசாரணை ஒரு ஆரம்பம் மட்டுமே; இதன் தாக்கம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். ஆனால் 41 உயிர்கள் பலியான இந்த கரூர் வழக்கு விஜய்யின் அரசியல் நேர்மைக்கு ஒரு சோதனைக் களமாகும். வரும் நாட்களில் கூட்டணியில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சிபிஐயின் அடுத்தகட்ட நகர்வுகள், தமிழக அரசியலில் யார் பலமானவர்கள் என்பதைத் தெளிவுபடுத்தும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
