அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில் சிபிஎஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் தனது பேட்டியின் எடிட் செய்யப்படாத முழு பேட்டியை வெளியிட்டதன் மூலம், உலக அளவில் அணு ஆயுத சோதனைகள் குறித்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். ட்ரம்ப்பின் கூற்றுப்படி, அமெரிக்காவுடைய முக்கிய எதிரி நாடுகளான ரஷ்யா, சீனா, வடகொரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் தனது பேட்டியில், பூமிக்கு அடியில் ரகசியமாக அணு ஆயுதங்களை சோதிக்கும் இந்த நாடுகள் குறித்து பேசினார். ரஷ்யா மற்றும் சீனாவில் அமெரிக்காவில் உள்ளதை போல கேள்வி கேட்கும் ஊடகங்கள் இல்லாததால், அவர்கள் ரகசியமாக சோதனைகளை நடத்த முடிகிறது. ஆனால் அமெரிக்கா ஒரு ‘ஓப்பன் சொசைட்டி’ என்பதால் ரகசியமாக எதுவும் செய்ய முடியாது.
பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை சோதிக்கிறது என்று ட்ரம்ப் வெளிப்படையாக கூறியது, இந்தியாவுக்கு நேரடி அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள அதன் இரு அண்டை எதிரிகளுமே சீனா, பாகிஸ்தான் ரகசியமாகத் தங்கள் திறன்களை மேம்படுத்துகின்றன என்ற செய்தியை உறுதிப்படுத்துகிறது.
எதிரி நாடுகள் அணு ஆயுத சோதனை செய்யும்போது அமெரிக்கா அமைதியாக இருக்க முடியாது. எனவே, 1992-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தனக்குத்தானே விதித்த அணு ஆயுத சோதனை கட்டுப்பாட்டைக் கைவிட்டு, மீண்டும் சோதனைகளில் ஈடுபட வேண்டும் என்று ட்ரம்ப் வாதிடுகிறார்.
ட்ரம்ப் அதிரடியாக அறிவிப்புகளை வெளியிடுவது வாடிக்கை என்பதால், அமெரிக்காவின் எரிசக்தி துறைச் செயலர், இந்த சோதனைகள் ‘நான்-கிரிட்டிகல்’ (Non-Critical) அதாவது, முழு அணு ஆயுத சோதனையாக இல்லாமல், ஏவுகணையின் விநியோக வழிமுறைகளை மட்டும் சோதிப்பதாக இருக்கும் என்று ட்ரம்ப்பின் கருத்தை மட்டுப்படுத்த முயன்றார்.
ட்ரம்ப் கூறிய இந்த தகவலின் நம்பகத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை என்றாலும், கடந்த காலங்களில் பாகிஸ்தானில் நடந்த சில சம்பவங்கள் சந்தேகங்களை எழுப்புகின்றன:
2024 மே 10 அன்று, இந்திய விமானப்படை சர்கோதா அருகே உள்ள நூர்கான் விமானப்படை தளம் அருகில் இருக்கும் கிரானா ஹில்ஸ் பகுதியை தாக்கியது. இந்த பகுதியில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சேமிக்கப்பட்டு சோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை கோரியது.
இந்த தாக்குதலுக்கு பிறகு இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவின் கதிர்வீச்சு கண்காணிப்பு விமானம் தரையிறங்கியது, மற்றும் எகிப்தில் இருந்து போரான் சரக்குடன் ஒரு ஹெர்குலிஸ் விமானம் அவசரமாக வந்திறங்கியது போன்ற நிகழ்வுகள் அங்கு ஒரு அணுக்கசிவு இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பின.
கில்கிட்-பால்டிஸ்தான் பகுதிகளில் டெக்டானிக் பிளேட் நகர்வு இன்றி ஏற்பட்ட அதிகப்படியான நில அதிர்வுகள், ரகசிய நிலத்தடி சோதனைகளின் அதிர்வுகளாக இருக்கலாம் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
சீனா மற்றும் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை மேம்படுத்தி வருவதாக அமெரிக்க அதிபரே பேசும் நிலையில், இந்தியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த வேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இரண்டு அணு ஆயுத எதிரிகளுக்கு நடுவில் இருக்கும் இந்தியாவுக்கு, தனது 140 கோடி மக்களின் பாதுகாப்பிற்காக அணு ஆயுத சோதனை அத்தியாவசியமாகிறது.
1999-இல் இந்தியா சோதித்த ஹைட்ரஜன் குண்டு சோதனையின் பலனை வெளியிடுவது, இந்தியாவின் அணுசக்தி திறனை வெளிப்படையாக அறிவித்து, அண்டை நாடுகளுக்கு ஒரு வலுவான தடுப்பணையை உருவாக்கும்.
அமெரிக்காவே இப்போது சோதனைகளை பற்றி பேச தொடங்கியுள்ளதால், இந்தியாவுக்கும் இதே காரணங்களை கூறி சோதனைகளை நடத்த ஒரு சரியான அரசியல் மற்றும் இராஜதந்திர வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலகம் மீண்டும் ஓர் அணு ஆயுதப் போட்டி சூழ்நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதையே ட்ரம்ப்பின் இந்த பேட்டி தெளிவாக உணர்த்துகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
