நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை சம்பவம். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் பெரம்பூரில் தான் கட்டிவரும் புதிய வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது 8 நபர்கள் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுக் கிடக்கிறது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
கொலையான ஆம்ஸ்ட்ராங் தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் என்பதால் அவர் உயிருக்கே பாதுகாப்பு இல்லை. பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும் என பல்வேறு அரசியல் பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும், திரைப் பிரபலங்களும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, அவர்களின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வந்த ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை தலித் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இப்படுகொலை நிகழ்த்துப்பட்டுள்ளது என முதற்கட்டமாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த ஆரம்பிச்சுட்டாருல சந்திரபாபு நாயுடு.. நிர்மலா சீதாராமனை நேரில் போய் சந்தித்து வைத்த கோரிக்கை
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான செல்வி. மாயாவதி ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்தார். மேலும் அவர் இப்படுகொலை குறித்து தனது வலிமையான கண்டனத்தையும் பதிவு செய்தார்.
இப்படுகொலைக்குக் காரணமானவர்களை காவல் துறை இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை பலப்படுத்தியவர் ஆம்ஸ்ட்ராங். இவரது மரணம் தனிப்பட்ட கட்சிப் பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்சினை. முதலமைச்சர் சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டும். தலித் மக்களை முதலமைச்சர் பாதுகாக்க வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் மரண வழக்கை உடனடியாக சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் இரங்கல் கூட்டத்தில் பேசினார் மாயாவதி. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு திருமாவளவன், பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தி, எடப்பாடி பழனிச்சாமி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், அண்ணாமலை உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.