மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்திக்கு பிரிட்டன் உள்பட முக்கிய நாடுகள் தங்களுடைய போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், டிரம்பின் இந்த கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிராந்தியத்தில் நடந்து வரும் மோதல்கள் ஒரு நீளமாக போராக உருவெடுப்பதை லண்டன் விரும்பவில்லை என்றும், அதில் பிரிட்டன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாது என்றும் உறுதிபட தெரிவித்தார். இந்த போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அவ்வளவு தூரம் உலக நாடுகளின் பொருளாதார நிலைமை மோசமடையும் என்றும், இது சாமானிய மக்களின் வாழ்க்கை செலவை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி என்பது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை தீர்மானிக்கும் மிக முக்கியமான கடல்வழி பாதையாகும். தற்போது ஈரான் இந்த பாதையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது உலகளாவிய மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் ராணுவ ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஆனால், கீர் ஸ்டார்மர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, ஈரானுடன் ஒரு ‘பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட்ட உடன்படிக்கை மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வை தரும் என்று வாதிட்டு வருகிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கீர் ஸ்டார்மர் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் மிகவும் பதற்றமாக இருந்ததாக கூறப்படுகிறது. போர்க்கப்பல்களை அனுப்ப மறுக்கும் பிரிட்டனின் முடிவை டிரம்ப் கடுமையாக விமர்சித்ததோடு, “இதை நான் நினைவில் வைத்திருப்பேன்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்காத நாடுகளுக்கு நேட்டோ அமைப்பில் வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் உக்ரைன் மீதான ஆதரவு ஆகியவற்றை குறைத்து கொள்ளப்போவதாகவும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும், பிரிட்டன் அமைச்சர்கள் டிரம்பின் இந்த வார்த்தைகளை வெறும் வேட்டு என்று கூறி ஒதுக்கியுள்ளனர்.
பிரிட்டனின் இந்த நிலைப்பாட்டிற்கு ஆதரவாக பிரான்ஸ், கனடா, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்பும் திட்டத்தை நிராகரித்துள்ளன. கூட்டு ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, இந்த பகுதியில் மீண்டும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க அனைத்து ஐரோப்பிய கூட்டாளிகளுடன் இணைந்து ஒரு கூட்டு திட்டத்தை உருவாக்க முயற்சி செய்யலாம் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. போர்க்கப்பல்களுக்கு பதிலாக, கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்கும் ட்ரோன்களை மட்டுமே அனுப்ப சில நாடுகள் ஆலோசித்து வருகிறது. இது ஒரு நேரடி தாக்குதலில் ஈடுபடுவதை தவிர்த்து, பாதுகாப்பை மட்டும் உறுதி செய்யும் ஒரு சமரச முடிவாக பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஏற்கனவே பிரிட்டனில் எரிபொருள் விலை உயர்ந்து வரும் சூழலில், நேரடிப் போரில் ஈடுபடுவது உள்நாட்டு பொருளாதாரத்தை இன்னும் பாதாளத்திற்கு தள்ளும் என்று ஸ்டார்மர் அஞ்சுகிறார். டொனால்ட் டிரம்பின் கடும் அழுத்தங்களுக்கு பணியாமல், தனது நாட்டின் நலன்களையும் உலகளாவிய அமைதியையும் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்காவை பகைத்து கொள்ளாமல் அதே நேரத்தில் ஒரு நீண்டகால போரில் சிக்கி கொள்ளாமல் இருப்பதே பிரிட்டனின் தற்போதைய ராஜதந்திர நகர்வாக உள்ளது.
மொத்தத்தில் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானின் பிடிவாதம் மற்றும் அமெரிக்காவின் ஆக்ரோஷம் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு நடுநிலையான பாதையை வகுக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு நல்ல பலனை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
