தமிழக அரசியல் களம் தற்போது ஒரு சிக்கலான சதுரங்க வேட்டையை போல காட்சியளிக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் ஒரு சித்திரமும், ஆழமாக பார்த்தால் முற்றிலும் வேறொரு சித்திரமும் தெரிவதுதான் இப்போதைய அரசியல் விந்தை.
குறிப்பாக, ஆளும் திமுக பாஜகவை வெளியரங்கமாக எதிர்த்தாலும், திரைமறைவில் மத்திய அரசுடன் ஒருவித ‘கள்ள உறவில்’ இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதே சமயம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, கடந்த தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டாலும், தற்போது ஒரு நல்ல நேரடியான உறவை பேணி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், மறுபுறம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் ரகசியமாக ‘கள்ள உறவில்’ இருப்பதாக சொல்லப்படுவது விவாதங்களை கிளப்பியுள்ளது.
இந்த குழப்பமான சூழலில், கொள்கை மாறாமல் பாஜகவை மிக உறுதியோடு எதிர்க்கும் ஒரே சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளது. அவர்கள் சித்தாந்த ரீதியாக பாஜகவின் தீவிர எதிர்ப்பாளர்களாக தொடர்கின்றனர். அதேபோல், தேசிய கட்சியான காங்கிரஸை தமிழக மண்ணில் மிக கடுமையாக, சமரசமின்றி எதிர்க்கும் ஒரே கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது. திராவிட அரசியலுக்கு மாற்றாக தூய தமிழ் தேசியத்தை முன்வைக்கும் சீமான், காங்கிரஸையும் பாஜகவையும் ஒரே தராசில் வைத்து விமர்சிப்பதன் மூலம் தனது தனித்துவத்தை காட்டுகிறார்.
இப்படி ஒவ்வொரு கட்சியும் ஒரு பக்கம் கை குலுக்கி கொண்டு, மறுபக்கம் கத்தியை தீட்டி கொண்டிருக்கும் இந்த சூழல், தமிழக அரசியலை ஒரு புரியாத புதிராக மாற்றியுள்ளது. கொள்கைக்காக கூட்டணி அமைந்ததா அல்லது தேர்தலுக்காக கொள்கை தியாகம் செய்யப்பட்டதா என்பதை பொதுமக்கள் கணிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
நண்பன் யார், எதிரி யார் என்பதே தெரியாத அளவுக்கு ரகசிய தொடர்புகளும், வெளிப்படையான மோதல்களும் பின்னி பிணைந்து கிடக்கின்றன. இந்த புரியாத புதிருக்கு விடை 2026 சட்டமன்ற தேர்தலின் போதுதான் கிடைக்கும். வாக்காளர்கள் இந்த அரசியல் மாய வலைகளை உடைத்து, யாருக்கு அதிகாரம் வழங்க போகிறார்கள் என்பதுதான் இப்போதைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு. மொத்தத்தில் தமிழக அரசியல் என்பது ஒரு தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட மர்ம தொடராகவே நீடிக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
