பீகார் மாநில டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட பெரும் குளறுபடி, மாணவர்களை நிலைகுலைய செய்துள்ளது. 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் சிலருக்கு 257 மதிப்பெண்கள் என நம்ப முடியாத அளவிலும், 30 மதிப்பெண் செய்முறை தேர்வில் சிலருக்கு 225 மதிப்பெண்கள் என வியக்கத்தக்க வகையிலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த அப்பட்டமான தவறு, மாணவர்களிடையே கடும் சீற்றத்தை உண்டாக்கியதோடு, பல்கலைக்கழகத்தின் தேர்வு மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகள் குறித்து பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மதிப்பெண் தவறுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தங்களுக்கு சரியான விளக்கத்தை பெறுவதற்காகக் கல்லூரி முதல் பல்கலைக்கழக அலுவலகங்கள் வரை அலைந்து திரிந்துள்ளனர். சில மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் முழுமையாக முடக்கி வைக்கப்பட்டன. சிலர், தேர்வுகளை நன்றாக எழுதியிருந்தும், தேர்ச்சி பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தன.
“இது எங்கள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது,” என்று பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார். பெரும்பாலான மாணவர்கள், இதனால் வேலை வாய்ப்புகள் மற்றும் மேல்படிப்புகளுக்கான காலதாமதம் ஏற்படுமோ என அஞ்சுகின்றனர்.
டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற தவறுகள் நடப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில், மதிப்பெண் கூட்டலில் ஏற்படும் பிழைகள், விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாதது, மற்றும் இளங்கலை, முதுகலை என இருநிலைகளிலும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் இருந்த குளறுபடிகள் குறித்து மாணவர்கள் பல புகார்களை பதிவு செய்துள்ளனர். ஆனால், நிர்வாகம் இப்புகார்களை சாதாரணமாக, ‘டெக்னிக்கல் எர்ரர்’ எனக் கூறி வந்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் விளக்கமளித்தபோது, இது தொழில்நுட்பக் கோளாறோ அல்லது மனிதத் தவறோ காரணமாக இருக்கலாம் என்றும், அனைத்துப் பிழைகளும் இரண்டு நாட்களுக்குள் சரிசெய்யப்படும் என்றும், “திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் விரைவில் வழங்கப்படும்” என்றும் உறுதியளித்தார்.
இந்த சம்பவம் அரசு பல்கலைக்கழகங்களின் தேர்வு முறைகளில் உள்ள நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து மீண்டும் தீவிரமான கவலைகளை எழுப்பியுள்ளன. இத்தகைய தொடர் தவறுகள், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்பதோடு, கல்வித் தரத்தின் மீதான நம்பிக்கையையும் குறைத்து வருகின்றன. இதை சரிசெய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.