பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க, சுனாமி போன்ற வெற்றியை பதிவு செய்துள்ளது. மாநிலத்தில் ஐந்தாவது முறையாக நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடியை விட, முதலமைச்சர் நிதிஷ் குமாரின் மக்கள் ஆதரவும், குறிப்பாக பெண் வாக்காளர்களின் ஆதரவும் தான் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
2005 முதல், நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஐந்தாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அவர் 10-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்பது ஒரு மிகப்பெரிய சாதனை. ஜோதி பாசு அல்லது நவீன் பட்நாயக் போன்றவர்களுடன் ஒப்பிடுகையில் இது தனித்துவமானது.
பீகாரில் நிதிஷ் குமார் எந்த கூட்டணியில் இருந்தாலும், அதுவே வெற்றி பெறுகிறது. இந்த வெற்றிக்கு மோடியின் ஆதரவை விட, நிதிஷ் குமாரின் தனிப்பட்ட செல்வாக்கே பிரதானம்.
என்டிஏவின் இந்த மகத்தான வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் பெண் வாக்காளர்களே ஆவர்.: நிதிஷ் குமாரால் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு சட்டம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
2007 முதல் பெண்களுக்கு சைக்கிள், கல்விக்கான உதவித் திட்டங்கள், அத்துடன் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சுயதொழில் தொடங்குவதற்காக ரூ. 2 லட்சம் வரையிலான கடனுதவி மற்றும் முன்பணமாக ரூ. 10,000 வழங்கிய திட்டம் போன்ற அறிவிப்புகள் பெண்கள் மத்தியில் அவருக்கு அபரிமிதமான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பெண் வாக்காளர்களில் 71% பேர் என்டிஏ கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர், இது வெற்றியின் வீதத்தை அதிகரித்துள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் தலைமையிலான மகா கட்பந்தன் கூட்டணியின் தோல்வி கடுமையானதாக உள்ளது. ஆர்ஜேடி சரிவு: ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 78 இடங்களில் இருந்து சுமார் 24 இடங்களுக்குச் சரிந்துள்ளது. மகா கட்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரே தோல்வியடைந்திருப்பது, மக்கள் இக்கூட்டணியை முற்றிலும் புறக்கணித்ததை காட்டுகிறது.
நிதிஷ் குமாருக்கு குறிப்பாக பெண்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை மகா கட்பந்தனால் உடைக்க முடியவில்லை. ஆளும் கூட்டணியின் மீதுள்ள நம்பிக்கையை எதிர்க்கட்சிகளால் பெற முடியவில்லை.தோல்விக்கு பிறகு, மகா கட்பந்தன் கூட்டணி, வாக்காளர்கள் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாலும், வாக்குத் திருட்டு நடந்ததாலுமே தோல்வி நேர்ந்ததாக குற்றம் சாட்டியது.
243 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் என்டிஏ முன்னிலை பெறுவது போன்ற மிகப்பெரிய வித்தியாசத்தை, வெறும் முறைகேடுகள் மட்டுமே தீர்மானிக்க முடியாது. இது மக்கள் தீர்ப்பு என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்க வேண்டும். வாக்குத் திருட்டுதான் முக்கிய காரணம் எனில், தேர்தலை புறக்கணித்திருக்க வேண்டும். தேர்தலில் பங்கேற்று தோல்விக்கு பின் காரணம் காட்டுவது பொருத்தமற்றது.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ்: அரசியல் வியூக வகுப்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெறுவது அரிது. பிரசாந்த் கிஷோரின் தோல்வி ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இது அவரது அரசியல் ஆலோசக பணிக்கு முரணானது அல்ல.
பீகார் வெற்றி, தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கும். எனினும், ஒரு மாநில தேர்தல் முடிவு மற்ற மாநிலங்களில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தாது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது கடினம்.
பீகார் தோல்வியை காரணம் காட்டி, தமிழகத்தில் திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸை ஓரங்கட்டவோ அல்லது இழிவுபடுத்தவோ வாய்ப்பில்லை. சிறுபான்மை சமூக வாக்குகளை இழக்க விரும்பாததாலும், காங்கிரஸை வெளியேற்றினால், அது விஜய்யின் கட்சிக்கு ஆதரவாக நகர வாய்ப்புள்ளதாலும், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கூட்டணியை உடைக்க மாட்டார் என்றே நம்பப்படுகிறது.
ராகுல் காந்தி தனது முயற்சிகளை செய்தாலும், மக்கள் மத்தியில் காங்கிரஸால் வெற்றிகரமாக நம்பிக்கையை பெற முடியவில்லை. இது அரசியல் காலச்சக்கரம்; இப்போது பாஜகவுக்கு சாதகமான காலம் என்பதால், உடனடியாக காங்கிரஸால் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது.
இந்தத் தேர்தல் முடிவுகள், அதிகாரத்தில் இருக்கும் ஒரு கூட்டணியை 20 ஆண்டுகள் கழித்தும் தோற்கடிக்க முடியவில்லை என்றால், மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை என்டிஏ கூட்டணிக்கு பறைசாற்றுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
