RIP.. மூன்று வருடங்களாக வேலை கிடைக்காத இளைஞரின் அதிர்ச்சி பதிவு..!

  பெங்களூரை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், மூன்று வருடங்களாக வேலை கிடைக்கவில்லை என்றும் இனிமேல் வேலை தேடும் முயற்சியை கைவிடப் போவதாகவும் கூறி, தனது லிங்கடின் பக்கத்தில் RIP என பதிவு செய்திருப்பது…

jobless

 

பெங்களூரை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், மூன்று வருடங்களாக வேலை கிடைக்கவில்லை என்றும் இனிமேல் வேலை தேடும் முயற்சியை கைவிடப் போவதாகவும் கூறி, தனது லிங்கடின் பக்கத்தில் RIP என பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம் வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் வேலை செய்பவர்களுக்கே ஏஐ தொழில்நுட்பத்தால் எந்த நேரமும் வேலைக்கு ஆபத்து வரலாம் என்பதால் அவர்கள் அச்சத்துடன் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த பிரசாந்த் ஹரிதாஸ் என்ற இளைஞர், தான் படித்து முடித்துவிட்டு மூன்று வருடங்களாக வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும், பல விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தாலும் பெரும்பாலான விண்ணப்பங்களுக்கு பதில் கூட இல்லை என்றும், சில நேர்காணல்களில் கலந்து கொண்ட போதிலும் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, தான் வேலை தேடும் முயற்சியை கைவிடப் போவதாகவும் கூறியுள்ளார்.

“நன்றி லிங்கடின், நன்றி தொழில் துறை உரிமையாளர்களே! என் விண்ணப்பங்களை கண்டுகொள்ளாமல் தள்ளுபடி செய்வதற்கும் நன்றி. நான் வேலை பெறுவதற்காக செலவழித்த பணத்தையும் நேரத்தையும் வீணாக்கியதற்கும் நன்றி. என்னுடைய இந்த பதிவுக்குப் பிறகு யாரும் என்னை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் என்று எனக்கு தெரியும். எவ்வளவு திறமை உள்ளவனாக இருந்தாலும், எத்தனை பரிந்துரைகள் இருந்தாலும், இது எதற்கும் உதவாது, RIP!” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவுக்குப் பலர் கவலை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஹரிதாஸ் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்: “நான் வேலை கிடைக்கவில்லை என்பதற்காக விரக்தி அடைந்து தற்கொலை செய்யப் போவதில்லை. நான் இன்னும் வாழ்க்கையில் பல விஷயங்களை அனுபவிக்க வேண்டும். புதிய உணவுகளை சாப்பிடவும், பல இடங்களை சுற்றிப் பார்க்கவும் எனக்கு ஆர்வம் உள்ளது. வேலையில் எனக்கு தோல்வி கிடைத்தாலும், தனிமையில் இருக்க முடியாது. எனவே, நான் வாழ்ந்தாக வேண்டும்!” என்று பதிவு செய்துள்ளார்.

உங்கள் நிலையை நன்கு புரிந்து கொள்கிறோம். ஆனால், இது இறுதி அல்ல. உங்கள் முயற்சியும் வீணாகாது. கண்டிப்பாக உங்களுக்கு வேலை கிடைக்கும் என்று பலர் கருத்துகள் மூலம் ஊக்கமளித்து ஆறுதல் வழங்கி வருகின்றனர்.