பெங்களூரின் அதிகாரப்பூர்வ மொழி என்ன என்று கேள்வி கேட்டபோது, ஒருவர் கூட “கன்னடம்” என்று பதில் சொல்லவில்லை என்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து, கன்னடர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களிடம் கருத்து கேட்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது. அதில், “பெங்களூரின் அதிகாரப்பூர்வ மொழி என்ன?” என்று கேட்கும் போது, சிலர் ஹிந்தி என்றும், சிலர் சமஸ்கிருதம் என்றும், சிலர் ஆங்கிலம் மற்றும் தமிழ் என்றும் சிலர் பதிலளித்தனர். ஆனால் அந்த வீடியோவில் பதிலளித்த எவரும் “கன்னடம்” என்று சொல்லவில்லை.
கர்நாடக மாநில தலைநகரிலிருந்து கொண்டு கன்னடத்துக்கே இவ்வளவு அங்கீகாரம் இல்லாமல் போனது குறித்து, கன்னடர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். “இந்த தலைமுறை குழந்தைகளுக்கு பொது அறிவு என்பது இல்லை; அவர்களது உலகமே பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் தான். நம்முடைய தாய்மொழி எது என்பது கூட தெரியாமல், மாநிலத்தின் அடையாளத்தை இழந்து வருகின்றனர். பொது அறிவும் இல்லை, நடப்பு விவகாரங்களுக்கான கவனமும் இல்லை,” என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த விவகாரத்தில், தமிழர்களை கன்னடர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் இந்திக்கு எதிராக ஒரு மொழிப்போர் நடந்து வரும் நிலையில், கர்நாடகத்தில் தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளையும் ஏற்றுக்கொண்டதே இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.
கன்னடத்தை முன்னிறுத்த மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ, கன்னடர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநில அரசு கன்னடத்தை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.