உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான Teleperformance நிறுவனம், கால் சென்டர் பணிகளுக்கு ஏ.ஐ. (AI) பயன்படுத்த இருப்பதாக கூறப்படுவதால், 90,000 இந்தியர்களின் வேலை கேள்விக்குறியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக வாடிக்கையாளர் சேவைக்கு போன் செய்தால், ஒரு வித்தியாசமான குரல் உணரப்படுகிறது. அதற்குக் காரணம் ஏ.ஐ. குரல் தான் என்று கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கால் சென்டர் நிறுவனமான Teleperformance மேற்கத்திய வாடிக்கையாளர்களுக்காக இந்தியர்களை கால் சென்டர் பணியாளர்களாக அமர்த்தி, இத்தொழிலை நடத்தி வந்தது.
ஆங்கிலம் பேசும் இந்திய வாடிக்கையாளர் பிரதிநிதிகள், பெரும் அளவில் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது இந்நிறுவனம் ஊழியர்களுக்கு பதிலாக ஏஐ மென்பொருளை பயன்படுத்தி வருகிறது. இந்த மென்பொருள், வாடிக்கையாளர்களின் குறைகளை கேட்டு, அதை நிவர்த்தி செய்து வருவதாகவும், இதனால் ஏராளமான கால் சென்டர் பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து Teleperformance நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
“எங்களுடைய மேற்கத்திய வாடிக்கையாளர்களுக்கு, இந்தியாவிலிருந்து கால் சென்டர் சேவை வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஏ.ஐ. பயன்படுத்தப்படுகிறது. இந்திய ஊழியர்கள் சிலர் பேசும்போது, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு புரிதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் அந்த சிக்கல் இருக்காது.” என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த புதிய மாற்றத்தை ஏராளமானவர்கள் தேவையற்ற ஒன்றாகவே பார்க்கிறார்கள். இந்திய உச்சரிப்பில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுடைய குறைகளை உண்மையில் கேட்டு, எங்களுக்கு உதவ விரும்பும் ஒருவருடன் தான் நாம் பேச விரும்புகிறோம். ஒரு மெஷினுடன் பேச வேண்டிய நிலை ஏற்படுவதை விரும்பவில்லை.”
எனவே, முழுமையாக ஏ.ஐ.-யின் மூலம் கால் சென்டர் நடத்துவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்பதே சிறந்தது.