ஐபோன் வேண்டும் என 3 நாள் உண்ணாவிரதம் இருந்த மகன்.. பூ விற்கும் தாய் செய்த தரமான செயல்..!

Published:

பெங்களூரில் கோவில் பூ விற்கும் பெண்ணின் மகன் தனக்கு ஐபோன் வேண்டும் என்று கூறி மூன்று நாட்களாக சாப்பிடாமல் இருந்த நிலையில் அந்த தாய் தான் பூ விற்று சேர்த்து வைத்த பணத்தில் ஐபோன் வாங்கி கொடுத்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் உள்ள கோவில் ஒன்றில் கடந்த பல ஆண்டுகளாக பூ விற்று வரும் பெண்மணிக்கு கல்லூரியில் படிக்கும் மகன் இருக்கிறார். அவர் திடீரென தனக்கு ஐபோன் வேண்டும் என்று சொல்ல அந்த ஐபோன் எவ்வளவு என்பதை கேட்டு தாயார் அதிர்ச்சி அடைந்தார். இவ்வளவு பெரிய தொகையை என்னால் செலவழிக்க முடியாது என்று கூற, அதற்கு மகன் கோபித்துக் கொண்டு மூன்று நாட்கள் சாப்பிடவில்லை என தெரிகிறது.

மகனின் உண்ணாவிரதம் காரணமாக வருத்தம் அடைந்த பூ விற்கும் பெண் வேறு வழியின்றி தான் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தை தனது மகனுக்கு கொடுத்து ஐபோன் வாங்கிக் கொள்ள சொல்லி இருக்கிறார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தற்போதைய பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள வறுமையை பிள்ளைகளுக்கு எடுத்து சொல்வதில்லை என்றும் குழந்தைகளும் தனது குடும்பத்தில் உள்ள கஷ்டத்தை புரிந்து கொள்ளவில்லை என்றும் ஐபோன் போன்ற ஆடம்பர பொருள் வாங்குவதில் குறியாக இருக்கிறார்கள் என்றும் கூறி வருகின்றனர்.

பல பெற்றோர்கள் இதுபோல் தங்கள் குழந்தைகளை செல்லம் கொடுத்து கஷ்டம் தெரியாமல் வளர்ப்பதால் தான் பின்னால் பெரும் விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் பலர் அறிவுரை கூறி வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...