பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுதந்திரம் மற்றும் சுயாட்சி கேட்டு போராடும் சிந்தி முத்தாஹிதா மஹாஸ் (JSMM) அமைப்பின் தலைவர் ஷாஃபி புர்ஃபத், பாகிஸ்தான் இராணுவத்தின் மீது மிக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
புர்ஃபத் அவர்கள் பாகிஸ்தான் இராணுவத்தை “ஊழல் நிறைந்த கூலிப்படை மாஃபியா என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் இராணுவம் ஒருபோதும் சித்தாந்தம், இறையாண்மை, நீதி அல்லது தேசத்திற்காக சண்டையிட்டதில்லை. மாறாக, அது பணத்திற்காக மட்டுமே தனது விசுவாசத்தை வர்த்தகம் செய்கிறது.
“பாகிஸ்தான் இராணுவம், உலக நாடுகளையும், அதன் கூட்டணி சக்திகளையும் ஏமாற்றுவதிலும், நிதி ஆதாயங்களுக்காக சர்வதேச நம்பிக்கையை குலைப்பதிலும் ஈடுபட்டுள்ளது,” என்றும் அவர் சாடியுள்ளார். வரலாற்றில் அமெரிக்கா முதல் சோவியத் யூனியன் வரை, இன்று சீனா வரை அனைத்து நாடுகளையும் பாகிஸ்தான் ஏமாற்றி வந்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் பாகிஸ்தான் இராணுவம் நிதி ஆதாயம் தேடுவதாக புர்ஃபத் சுட்டிக்காட்டியுள்ளார்:
பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத தொழிற்சாலையாக செயல்பட்டு, பிறகு அதே பயங்கரவாதிகளை கொல்வதற்காக அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து பணம் பெறுகிறது. பயங்கரவாதத்தை ஒழிக்க இராணுவத்தால் முடியும், ஆனால், உலக நாடுகளிடமிருந்து தொடர்ந்து பணம் பெறுவதற்காக அது வேண்டுமென்றே பயங்கரவாதத்தை பேணி காப்பதாகவும் புர்ஃபத் குற்றம் சாட்டுகிறார்.
இஸ்லாமிய சித்தாந்தத்துக்கு முற்றிலும் முரணான சீனாவுடனும், இஸ்லாமோஃபோபியா கொண்டதாக கருதப்படும் அமெரிக்காவுடனும் கூட்டணி வைத்துள்ளது. “சீனா அதிக பணம் கொடுத்தால் வாஷிங்டனுக்கு துரோகம் செய்யும். அமெரிக்கா அதிக பணம் கொடுத்தால் சீனாவுக்கு துரோகம் செய்யும்.”
இஸ்ரேலை அங்கீகரிக்கவே கூடாது என்று முன்பு கூறிய பாகிஸ்தான், இப்போது அவர்களுடனும் கூட்டணி வைக்கிறது.இராணுவத் தளபதி அசீம் முனீர் அவர்களை புர்ஃபத் அவர்கள் “முட்டாள்தனமான, போலியான ஃபீல்ட் மார்ஷல்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் இராணுவத்தின் அடிப்படை நோக்கமே, நாட்டை எப்போதும் நிலையற்ற குழப்பத்திலேயே வைத்திருப்பதுதான். அப்போதுதான் இராணுவத்தை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிந்து தேசிய தலைவர் ஒருவர் பாகிஸ்தான் இராணுவத்தின் அடிப்படை கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மேலும் தனி சிந்து மாகாணம் என்ற கோரிக்கை எழவும் வாய்ப்பு உள்ளது.
ஒருபுறம் பலுசிஸ்தான் மாகாணத்தில் சுதந்திர கோரிக்கைக்காக நீண்டகாலமாக ஆயுத போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மறுபுறம், சிந்து மாகாணத்தில் சிந்தி முத்தாஹிதா மஹாஸ் போன்ற தேசியவாதக் கட்சிகள் சுயாட்சி மற்றும் தனிநாடு கோரி உறுதியுடன் குரல் கொடுத்து வருகின்றன.
பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணங்களான இவை இரண்டும் தனித்து செல்ல முற்படுவது, அந்நாடு “சிதறு தேங்காய் போல்” துண்டு துண்டாக உடையும் அபாயத்தை நோக்கி செல்வதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இத்தகைய தேசிய இன போராட்டங்கள், இராணுவத்தின் மீதான அவநம்பிக்கை, மற்றும் மோசமான பொருளாதார சூழல் ஆகியவற்றால் பாகிஸ்தானின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பலுச்சி மற்றும் சிந்து தலைவர்களின் எழுச்சி, பாகிஸ்தானின் இறையாண்மையை ஆழமாக பாதித்துள்ளது.
இந்த உள்நாட்டு பிளவுகளே பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும் என்றும், “பாகிஸ்தான்” என்ற தேசத்தின் பெயரும் எல்லைகளும் மாறும் காலச்சூழல் உருவாகி வருவதாகவும் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
