கத்தியின்றி, ரத்தமின்றி, ராணுவ நடவடிக்கையின்றி ஜனநாயகத்தின் கழுத்தை நெறித்த ஆசிம் முனீர்.. ராணுவ ஆட்சி மாற்றமில்லை.. ஆனால் ராணுவ ஆட்சி.. அரசியலைப்புடன் கூடிய ஆட்சி கவிழ்ப்பு.. பாகிஸ்தானின் 27-வது அரசியலமைப்பு திருத்தம்..! டம்மியான உச்சநீதிமன்றம்.. பொம்மைகள் ஆகும் பிரதமர், ஜனாதிபதி..

அயூப் கான், ஜியாவுல் ஹக், பர்வேஸ் முஷரஃப் வரிசையில் தற்போது ஆசிம் முனீர். நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இராணுவ சர்வாதிகாரத்தின் நீண்ட நெடிய வரலாறு உள்ளது. ஆனால், தற்போது பாகிஸ்தானில் நடந்துள்ள அரசியல்…

asif munir

அயூப் கான், ஜியாவுல் ஹக், பர்வேஸ் முஷரஃப் வரிசையில் தற்போது ஆசிம் முனீர். நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இராணுவ சர்வாதிகாரத்தின் நீண்ட நெடிய வரலாறு உள்ளது. ஆனால், தற்போது பாகிஸ்தானில் நடந்துள்ள அரசியல் ‘குண்டுவெடிப்பு’ இரத்த களறியோ, நேரடி இராணுவ ஆட்சி மாற்றமோ அல்ல; மாறாக, அரசியலமைப்பு ரீதியான கவிழ்ப்பு ஆகும். இது தென்கிழக்கு ஆசியாவுக்கே ஒரு புதிய பாடமாக மாறியுள்ளது.

எந்தவிதமான ஆயுத பலமும் இல்லாமல், அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் எப்படி ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து கட்டுப்பாடான சர்வாதிகாரத்தை நிறுவ முடியும் என்பதற்கான முன்மாதிரியாகப் பாகிஸ்தான் மாறியுள்ளது.

கடந்த வாரம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் 27-வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்றுள்ள இந்த திருத்தம், நீதித்துறையின் அதிகாரங்கள் மற்றும் சுதந்திரத்தை குறிப்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

அதிகார மாற்றம்: இந்தத் திருத்தம் மூலம், பாகிஸ்தானின் இராணுவம், குறிப்பாக அதன் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், மேலும் சக்திவாய்ந்தவராக மாறியுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பீல்ட் மார்ஷல் போன்ற உயர் அதிகாரிகளுக்கு ஆயுட்காலம் முழுவதும் குற்றவியல் மற்றும் சிவில் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அடுத்த தலைமை நீதிபதி உட்பட நாட்டின் பல முக்கிய நீதிபதிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இது பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றிலேயே அரசியலமைப்பின் மீதான மிக மோசமான தாக்குதல் என்று வர்ணிக்கப்படுகிறது. இராணுவம் இனி திரைமறைவில் இருந்து செயல்பட விரும்பாமல், நேரடியாகவே சிவில் அரசாங்கத்தை கட்டுப்படுத்த தயாராகிவிட்டது.

இந்தத் திருத்தத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய மாற்றம், சிவில் அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான உறவை வரையறுக்கும் விதி 243-ல் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திருத்தத்தின்படி, ‘பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி’ என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அது எப்போதும் இராணுவ தலைமை தளபதியிடமே இருக்கும்.

தற்போதுள்ள விதி 248, ஜனாதிபதி அல்லது ஆளுநர் பதவி காலத்தில் மட்டுமே அவர்களுக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கிறது. ஆனால், 27-வது திருத்தம், இராணுவ தலைமைத் தளபதி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ஆயுட்காலம் முழுவதும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிரந்தர விலக்கு அளிக்கிறது. இதன் மூலம், அவர்கள் பதவியில் இருக்கும்போது செய்த ஊழல், மோசடி அல்லது இரத்த களறி போன்ற எந்த செயலுக்காகவும் அவர்கள் மீது வழக்கு போட முடியாது.

ஒரு இராணுவ உயர் அதிகாரியை பதவியிலிருந்து நீக்க, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்ற புதிய விதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இது பிரதமரை நீக்க தேவைப்படும் சாதாரண பெரும்பான்மையை விட கடுமையானதாகும். இதன்மூலம், இராணுவத்தின் பதவிகள் அரசியலமைப்பு ரீதியாக நிலைநிறுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

ஜனநாயகத்தில் மக்கள் நம்பிக்கையை தக்கவைத்து வந்த ஒரே அமைப்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இருந்தது. ஆனால், தற்போது அந்த சுதந்திரமும் சிதைக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம் மூலம், ஃபெடரல் அரசியலமைப்பு நீதிமன்றம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படுகிறது.

தற்போது உச்ச நீதிமன்றம் கையாண்டு வரும் அரசியலமைப்பு பிணக்குகள், அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள், மாகாண மோதல்கள் ஆகிய அனைத்து அதிகாரங்களும் இந்த புதிய FCC-க்கு மாற்றப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் வெறும் சிவில் மற்றும் கிரிமினல் மேல்முறையீட்டு நீதிமன்றமாக தரம் குறைக்கப்பட்டுள்ளது.

FCC-ன் தலைமை நீதிபதியை அரசாங்கமே நியமிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது. மேலும், நீதிபதிகளை ஒரு உயர் நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு, நீதிபதியின் சம்மதம் இல்லாமலேயே மாற்றும் அதிகாரத்தையும் இந்தத் திருத்தம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள், முன்பு இருந்த சுதந்திரமான நீதிபதிகளை இலக்காக வைத்து எடுக்கப்பட்டதோடு, நீதித்துறையின் முதுகெலும்பையே உடைத்துவிட்டதாக கருதப்படுகிறது.

மே 2023-ல் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைதுக்கு பிறகு, பல்லாயிரக்கணக்கானோர் இராணுவ தலைமையகங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இது இராணுவத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்து, அதன் அதிகாரத்துக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியது. இந்த இழந்த மரியாதையை மீட்க இராணுவம் நான்கு நிலைகளில் (அரசியல், சட்டரீதியான, உணர்ச்சிபூர்வமான மற்றும் இராஜதந்திரம்) செயல்பட தொடங்கியது. இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டார்; அவரது கட்சி சட்டவிரோதமாக்கப்பட்டது.

அதன் பிறகு, தீவிரவாத தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற ராணுவ நடவடிக்கைகளை முனீர் தலைமை தாங்கி நடத்தினார். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கும்போது, இராணுவத்தை கேள்வி கேட்க கூடாது என்ற மனநிலையை மக்கள் மத்தியில் விதைத்து, ராணுவம் இழந்த மரியாதையை மீண்டும் பெற்றது.

இன்று பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி என்பது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் வெளிநாட்டு பயணங்களின் போது இராணுவ தளபதியைத் தன்னுடன் அழைத்து செல்வதும், ஆசிம் முனீர் உலக தலைவர்களுடன் கைகோர்ப்பதும் இராணுவத்தின் ஆதிக்கம் எவ்வளவு ஆழமானது என்பதை உலகிற்குப் பறைசாற்றுகிறது.

ஆசிம் முனீர் அதிகாரபூர்வமாக அதிபராக இல்லாவிட்டாலும், அவர் தனக்கு அளவில்லா அதிகாரத்தையும், பூஜ்ஜிய பொறுப்புணர்வும் கொண்ட ஒரு கட்டமைப்பை உருவாக்கிவிட்டார்.

சமீல காலங்களில், ஜனநாயகத்தை காக்கும் பொறுப்புள்ள நீதித்துறை மற்றும் அரசியலமைப்பை பயன்படுத்தியே சர்வாதிகாரம் நிறுவப்படுகிறது. இது உலகின் பிற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை. பாகிஸ்தானை போலவே, ஒரு நாட்டின் குடிமக்கள் உரிய நேரத்தில் கேள்வி எழுப்பவில்லை என்றால், ஜனநாயக உழைப்பு, அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் சட்டரீதியான சர்வாதிகாரமாக மாறுவது நிச்சயம். இதை தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.