Arnav Bigg Boss : தமிழில் தற்போது ஆரம்பமாகியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் சாச்சனா மட்டும் முதல் நாளிலேயே எலிமினேட் ஆகியிருந்தார். இந்த முடிவு தொடர்பாக காரசாரமான விவாதம் அரங்கேறி வந்தாலும் இன்னொரு பக்கம் அடுத்தடுத்த டாஸ்க்குகளால் பிக் பாஸ் நிகழ்ச்சி வேகம் எடுக்க தொடங்கி விட்டது.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் இதுவரையிலும் ஒன்றாக இருந்து தான் டாஸ்க்கில் மோதி வந்தனர். ஆனால் இந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக முக்கியமான ஒரு விஷயமே ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது தான். மொத்தமாக தற்போது 9 ஆண்களும், 8 பெண்களும் இருக்க இவர்களுக்கிடையேயான டாஸ்க் தான் இனிவரும் நாட்களில் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டாஸ்க், பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும் ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும் சென்று அடுத்தடுத்த தினங்களை கழிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிறைய சுவாரஸ்யம் அரங்கேறி வருவதுடன் மட்டுமில்லாமல் புது விதமான பிரச்சனைகளோ அல்லது வேறு ஏதேனும் சண்டைகளோ வருவதற்கான வாய்ப்புகள் கூட அதிகமாக தான் இருக்கும் என தோன்றுகிறது.
இதன் முதல் படியாக பெண்கள் அணியில் இருந்து யார் செல்ல வேண்டும் என்பது பற்றிய விவாதத்திலேயே பவித்ரா மற்றும் ஜாக்குலின் ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய அளவில் சண்டை வெடித்திருந்தது. அவர்களை சமரசம் செய்வதற்காக மற்ற ஆறு பெண்களும் முட்டி மோதிக்கொள்ள யாரை அவர்கள் அனுப்பப் போகிறார்கள் என்பதும் பெரிய எதிர்பார்ப்பாக தான் உள்ளது.
இதற்கு மத்தியில் ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு முத்துக்குமரன் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் அனைவரும் அவரை ஒரு மனதாக தேர்வு செய்ததாக தெரிகிறது. இதனிடையே, அர்னவ் அவருக்கு போட்டுக் கொடுத்த திட்டம் ஒன்று தான் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இது தொடர்பாக முத்துக்குமரனிடம் பேசும் அர்னவ், ‘நீ அங்கே சென்றதும் அனைத்து பெண்களிடமும் நல்ல ஒரு நட்பு ரீதியாக பழக வேண்டாம். மெல்ல மெல்ல பழகினால் தான் நீ அவர்கள் பக்கம் நிற்பதாக நினைத்துக் கொள்வார்கள். உதாரணத்திற்கு என் பாய்ஸ் அணியுடன் உனக்கு ஒரு டாஸ்க் கடினமாக வந்தாலும் நீ அவர்களுக்காகத் தான் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் உன்னை நம்புவார்கள்.
ஆனால் கடைசியில் நமக்கான நேரம் வரும் போது நமது திட்டத்தை நாம் செயல்படுத்துவோம். அவர்களுடன் நின்று எங்களுக்கு எதிராக டாஸ்க் வரும் போது என்னை எதிர்த்து கூட நீ சண்டை போடு அதில் எந்த தப்பும் கிடையாது. ஆனால் கடைசியில் நீ பாய்ஸ் அணியில் உள்ள ஒருவன் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்” என்று கூறுகிறார்.
இரு அணிகளிலிருந்தும் ஒருவர் மாறிக் கொள்ளலாம் என்பதால் இதில் நிச்சயம் பல குழப்பங்கள் அரங்கேறவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.