தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல நடிகர் நடிகைகள் தங்களின் திருமண பந்தத்தை முறித்து வருவது தொடர்பான செய்திகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் தனுஷும் அவரது மனைவியும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் யாரும் எதிர்பாராத நேரத்தில் தங்களின் விவாகரத்து தொடர்பாக தகவல்களை அறிவித்திருந்தனர்.
சில தனிப்பட்ட காரணங்களால் இந்த முடிவை எடுத்திருந்ததாகவும் அவர்கள் அறிவித்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிரபல நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக இருவரது தரப்பிலிருந்தும் எதிரெதிர் கருத்துக்கள் வர ஜெயம் ரவி – ஆர்த்தியின் திருமண வாழ்க்கை தொடர்பான செய்திகள் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கிடையே பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் அவரது காதல் மனைவியுமான பாடகி சைந்தவியும் விவாகரத்து செய்திருந்தனர். இப்படி கோலிவுட் வட்டாரத்தில் நிறைய விவாகரத்து தொடர்பான செய்திகள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்க தற்போது யாரும் எதிர்பாராத மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
விவாகரத்து செய்த ஏ. ஆர். ரஹ்மான் – சாய்ரா
சர்வதேச அளவில் கவனம் பெற்று வரும் ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரஹ்மான் அவரது மனைவி சாய்ரா பானுவை 29 ஆண்டுகள் திருமண பந்தத்திற்கு பின்னர் பிரிய உள்ளதாக அறிவித்துள்ளனர். தற்போது இணையத்தில் இந்த தகவல் தீயாய் பரவி வரும் சூழலில் சாய்ரா பானுவின் வழக்கறிஞர் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த முடிவு அவர்களுக்கிடையே உணர்ச்சி அழுத்தத்தின் பெயரில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் மிக அதிகமாக நேசித்த போதிலும் சில கஷ்டங்கள் மற்றும் வேதனைகள் தீர்க்க முடியாத வலியை உருவாக்கியதாகவும் தெரிகிறது. அதே போல, யாராலும் அவர்களுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்த முடியாது என்ற நிலையில் அதிக வலி மற்றும் வேதனையுடன் சாய்ரா பானு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல, தங்களின் முடிவை ஆதரித்து தங்களுக்கான தனியுரிமையை கொடுக்கும் படியும் சாய்ரா பானு கேட்டுக் கொண்டுள்ளார்.
மகன் அமீனின் இன்ஸ்டா ஸ்டோரி
அதே போல ரஹ்மான் – சாய்ரா பானுவின் மகனான ஏ. ஆர். அமீன், தனது இன்ஸ்டா பக்கத்தில், “இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவருடனும் அனுப்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி” என்றும் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், ரஹ்மான் மற்றும் மனைவி சாய்ரா பானு பிரியவுள்ளது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 29 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த ரஹ்மான் – சாய்ரா தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.