ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்க தயாராகி வருகிறது. பிரபலமான ஆய்வாளர் மிங்-சி குவோவின் கணிப்புப்படி, ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் 2026 ஆம் ஆண்டு வெளியாகலாம்! இதன் உற்பத்தி 2025-ன் பிற்பகுதியில் அல்லது 2025 இறுதியிலோ தொடங்க வாய்ப்புள்ளது. இந்த போன்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமான மடிக்கக்கூடிய போன்களை போல இல்லாமல், ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோன் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் போல, புத்தகம் போன்ற வடிவமைப்பில் வரலாம். இதில், மடிப்பு தடம் இல்லாத 7.8 இன்ச் பெரிய உள் திரையும், 5.5 இன்ச் வெளித் திரையும் இருக்கும். இந்த மடிக்கக்கூடிய திரைப் பகுதிகளை சாம்சங் டிஸ்பிளே நிறுவனம் உற்பத்தி செய்யும். ஆப்பிளுக்காக 2026-ல் குறைந்த எண்ணிக்கையிலான உற்பத்தியை தொடங்க சாம்சங் தயாராகி வருகிறது.
இந்த புதிய ஐபோனில் டைட்டானியம் அலாய் ஃபிரேம், இரட்டை கேமரா அமைப்புஆகிய அம்சங்கள் இருக்கலாம். இட நெருக்கடி காரணமாக, ஃபேஸ் ஐடிக்கு பதிலாக பக்கவாட்டில் கைரேகை சென்சாராக டச் ஐடி மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டில், ஆரம்பகட்டமாக 3 முதல் 5 மில்லியன் மடிக்கக்கூடிய ஐபோன்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 2-3 ஆண்டுகளில், 15-20 மில்லியன் மடிக்கக்கூடிய ஐபோன்களை விற்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இது பெரிய அளவிலான வெளியீட்டைக் காட்டிலும், படிப்படியான அறிமுகத்தை குறிக்கிறது. இந்த ஐபோன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.73 லட்சம் முதல் ரூ.2.16 லட்சம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மடிக்கக்கூடிய ஐபோன் ஆப்பிளின் எதிர்காலத்திற்கு ஒரு புதிய திசையை தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!