பூரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினித் அகர்வால் கூறுகையில், “பிரியங்கா ஜோதியுடன் என்ன வகையில் தொடர்பில் இருந்தார், அவருடைய பாகிஸ்தான் பயணம் உள்ளிட்ட அனைத்துப் தகவல்களும் ஆராயப்பட்டு வருகிறது” என்றார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், பிரியங்கா விளக்கமளித்தபோது, “ஜோதியை நான் யூடியூப் மூலமாக தான் அறிந்தேன். அவர் மீது என்ன குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்திருந்தால் நான் அவருடன் நெருங்கி இருக்கவே மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “எனக்கு எந்த விசாரணை அமைப்பும் கேள்வி கேட்க விரும்பினால், நான் முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கிறேன். முதலில் எனக்கு நாடு தான் முக்கியம் . ஜெய்ஹிந்த்!” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பூரியை சேர்ந்த பிரியங்கா சேனாபதி ஒரு பயண வீடியோ வெளியிடுபவர். யூடியூபில் சுமார் 14,600 சந்தாதாரர்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் 20,000-க்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்டவர்.
மார்ச் 25 அன்று, “Odia Girl in Pakistan | Kartarpur Corridor Guide | Odia Vlog” என்ற தலைப்பில் பாகிஸ்தான் பயணத்தை குறித்த வீடியோ ஒன்றை பதிவேற்றியிருந்தார்.
பிரியங்கா, கடந்த ஆண்டு ஜோதி மல்ஹோத்தராவுடன் சேர்ந்து, பூரியில் உள்ள ஜகந்நாதர் கோவிலுக்கு சென்றதாக தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரியங்கா இதுவரை கைது செய்யப்படவில்லை. பூரியில் உள்ள தந்தையின் வீட்டில் தான் தங்கியுள்ளார். அவரது தந்தை ஊடகங்களுக்கு கூறுகையில்,
“ஜோதி உளவாளி என எனக்கு தெரியாது. சமீபத்தில் தான் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிந்தது. என் மகள் மாணவி மற்றும் யூடியூபர். ஜோதி செப்டம்பரில் பூரிக்கு வந்தபோது அவரை சந்தித்தாள்,” என்றார்.
“ஜோதி எங்கள் வீட்டுக்கு வரவே இல்லை. கார்தர்பூருக்கு பிரியங்கா வேறு ஒருவருடன் சென்றார். செல்லும் முன் சட்டப்படி அனைத்து ஆவணங்களும் வைத்திருந்தார். அங்கு பல யூடியூபர்கள் சென்றுள்ளனர். ஜோதியின் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு இருந்ததற்கான தகவல் எங்களுக்கு தெரியாது,” என்றும் கூறினார்.