டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு.. காலம் காலமாக பொய் சொல்லும் அரசியல்வாதிகள்.. $1 மதிப்பு ரூ.10 ஆனால் என்ன நடக்கும்? $1 மதிப்பு ரூ.100 ஆனால் என்ன நடக்கும்? டாலரின் ஏற்ற இறக்கத்தால் இந்திய மக்களுக்கு பிரச்சனையா? ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு என்ன தாக்கம்?

சமீப காலமாக, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது குறித்து பொதுவெளியில் அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. “ரூபாய் மதிப்பு 88ஐ தாண்டி சென்றுவிட்டதே, இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை குறிக்கிறதா?” என்பது போன்ற கேள்விகள்…

rupee vs dollar2

சமீப காலமாக, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது குறித்து பொதுவெளியில் அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. “ரூபாய் மதிப்பு 88ஐ தாண்டி சென்றுவிட்டதே, இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை குறிக்கிறதா?” என்பது போன்ற கேள்விகள் எழுவது இயல்பு. ஆனால், இந்த பொருளாதார நிகழ்வின் பின்னணியில் உள்ள அடிப்படையை புரிந்துகொள்வது அவசியம். டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பை இந்திய அரசோ அல்லது ரிசர்வ் வங்கி கூட நேரடியாக நிறுவுவது இல்லை , மாறாக, இது உலகளாவிய சந்தையின் டிமாண்ட் மற்றும் சப்ளை அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது.

நாணய மாற்று விகிதம் என்பது ஒரு பொருளின் விலையை போன்றது. இன்று சந்தையில் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகமாக இருந்தால், அதன் விலை இந்திய ரூபாயில் உயரும். மாறாக, டாலருக்கான சப்ளை அதிகமாகவும், தேவை குறைவாகவும் இருந்தால், இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்

பெரும்பாலான சர்வதேச வர்த்தகம் அதாவது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அமெரிக்க டாலரில்தான் நடைபெறுகிறது. இந்தியா இறக்குமதி செய்யும்போது டாலரில் பணம் செலுத்த வேண்டும். இதன் விளைவாக, இந்திய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் டாலரை வாங்குவதற்கான போட்டியில் ஈடுபடுகின்றன, இது டாலருக்கான தேவையை அதிகரிக்கிறது.

டாலருக்கான தேவை அதிகரிப்பதற்கான முக்கிய காரணம், இந்தியா பல ஆண்டுகளாக டாலரில் வர்த்தகம் செய்வது தான். டாலரில் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதால் டாலருக்கான தேவை அதிகமாகிறது. எனவே டாலரின் மதிப்பும் உயருகிறது.

இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய், மின்னணு சாதனங்கள் போன்ற பொருட்களை இறக்குமதி செய்வதால், டாலருக்கான தேவை நிரந்தரமாகவே அதிகமாக உள்ளது. ஆனால் இதுவே டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய தொடங்கினால், டாலரின் தேவை குறைந்துவிடும், அப்போது டாலரின் மதிப்பும் குறைந்துவிடும், இந்திய ரூபாயின் மதிப்பும் வலுப்பெறும்.

ரூபாய் வலுப்பெற்றால் என்ன ஆகும்? என்பதை இப்போது பார்ப்போம்.

1. இறக்குமதி மலிவாகும்:

ஒரு உதாரணத்திற்கு திடீரென ஒரு காரணத்தால் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு திடீரென ரூ.88-லிருந்து ரூ.10-ஆக குறைவதாக கற்பனை செய்வோம். அப்போது அமெரிக்காவிலிருந்து $20,000 மதிப்புள்ள ஒரு காரை இறக்குமதி செய்ய, முன்பு ரூ.17.6 லட்சம் தேவைப்படும். ஆனால் இப்போது அதே காருக்கு வெறும் ரூ.2 லட்சம் மட்டுமே தேவைப்படும்

வெளிநாட்டுப் பொருட்கள் மிகவும் மலிவாக கிடைப்பதால், இந்தியர்கள் அனைவரும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை நோக்கி செல்வார்கள். இந்திய பொருட்களின் விற்பனை சரிய வாய்ப்பு உள்ளது.

2. உள்நாட்டுத் தொழில்கள் முடக்கம்:

வெளிநாட்டுக் கார்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் விலையில் கிடைக்கும்போது, உள்நாட்டு ஆட்டோமொபைல் துறையின் கார்கள் சந்தையில் நிற்க முடியாது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7.1% பங்களிக்கும், மேலும் சுமார் 3.2 கோடி பேருக்கு வேலை வழங்கும் இந்த துறை, வெளிநாட்டு போட்டியின் காரணமாக மூடப்படும் அபாயம் ஏற்படும். மேலும் வேலை இழப்பு, வரி வருவாய் இழப்பு, ஒட்டுமொத்த உற்பத்தி சரிவு என பல பொருளாதார பேரழிவுகள் ஏற்படும்.

3. ஏற்றுமதி விலை உயரும் :

அதேபோல் ஒரு இந்தியத் தயாரிப்பு டீ-சர்ட்டின் விலை ரூ.450 என்று வைத்துக்கொள்வோம். அமெரிக்க டாலரின் மதிப்பு ரூபாய் 88-ல் இருக்கும்போது, ஒரு அமெரிக்க பயனர் அதை வாங்க $5.11 செலவிடுவார். ஆனால் ரூபாய் ₹10-க்கு வலுப்பெற்றால், அதே டீ-சர்ட்டை வாங்க அவர் $45 செலவிட வேண்டும். எனவே விலை அதிகமாக இருப்பதால், சர்வதேச சந்தையில் நம் நாட்டின் ஏற்றுமதிப் பொருட்கள் போட்டியிட முடியாது. இதனால், ஏற்றுமதி குறையும், டாலர் வருவாய் நின்றுவிடும், ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் முடங்கும்.

இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவில் ஐடி துறையில் பணிபுரியும் ஒரு இந்தியர், $1,00,000 சம்பளம் வாங்குகிறார் என்றால் தற்போது அவர் தனது வீட்டுக்கு ரூ.88,00,000 அனுப்புவார். ஆனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.10 என்றால் அவர் வீட்டுக்கு அனுப்பும் பணம் வெறும் ரூ.10,00,000 மட்டுமே. ரூ.78,00,000 அவருக்கு நஷ்டம் ஏற்படும்.

சுருக்கமாக சொன்னால், ரூபாய் வலுப்பெறுவது என்பது நாட்டின் உள்நாட்டு உற்பத்தி துறையையும் ஏற்றுமதியையும் பலவீனப்படுத்தி, பொருளாதார ஸ்திரத்தன்மைக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

ரிசர்வ் வங்கி நாணய மாற்று விகிதத்தை நேரடி சந்தை சக்திகளுக்கு விட்டுக்கொடுத்தாலும், அதன் ஏற்ற இறக்கங்களைக் கண்காணிக்கிறது. ரூபாய் திடீரென சரியும்போது ஆர்பிஐ தன்வசம் உள்ள டாலர் கையிருப்பை சந்தையில் விற்று, டாலர் சப்ளையை அதிகரித்து, ரூபாயின் வீழ்ச்சியை தடுக்கிறது. அதேபோல் ரூபாய் திடீரென ஏறும் போது ஆர்பிஐ சந்தையில் இருந்து டாலரை வாங்கி, டாலர் கையிருப்பை சேர்த்துக்கொள்கிறது. இது ரூபாயின் மதிப்பை ஒரு மிதமான அளவில் வைத்திருப்பதன் மூலம், ஏற்றுமதி துறையை பாதுகாக்கிறது.

இந்தக் கட்டுப்பாடு, ரூபாயின் மதிப்பு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள், மெதுவாக இயல்பான பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப மட்டுமே நகர வேண்டும் என்பதற்காகவே ஆர்.பி.ஐ இந்த நடவடிக்கையை எடுக்கிறது!

இந்த தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலேயே, அரசாங்கத்தின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. ரூபாயின் மதிப்பு குறைவது என்பது எப்போதும் வீழ்ச்சியை குறிப்பதில்லை; மாறாக, அது ஏற்றுமதியை ஊக்குவித்து, சர்வதேச சந்தையில் நம் தயாரிப்புகளுக்கு சாதகமான விலையை அளிக்கும் ஒரு கருவியாகவும் செயல்பட முடியும்.

அதே நேரத்தில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்வதோ அல்லது குறைவதோ, இந்திய மக்கள் தங்கள் உள்நாட்டு பொருளை வாங்குவதற்கும் விற்பதற்கும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உள்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களுக்கு மட்டுமே டாலரின் மதிப்பு தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலை சார்ந்து இருக்கும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மட்டுமே டாலர் தாக்கம் இருக்குமே தவிர ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் டாலரின் ஏற்ற இறக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே அரசியல்வாதிகள் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தால் இந்தியாவுக்கே பெரும் நஷ்டம் என பல ஆண்டுகளாக கூறி வரும் கதையை இனியும் யாரும் நம்ப வேண்டாம்.