அமெரிக்காவில் நடந்த சமீபத்திய மேயர் தேர்தல் முடிவுகள், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் குடியரசு கட்சியின் செல்வாக்கு குறைந்து வருவதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதே சமயம், உலக அரங்கில் இந்தியாவின் வர்த்தக மற்றும் அரசியல் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக மையங்களில் ஒன்றான நியூயார்க் மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோராம் மம்தானி 50%க்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ட்ரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி இந்த தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது ட்ரம்ப் மற்றும் அவரது கட்சியின் ராஜதந்திரங்களுக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
அமெரிக்கா குடியேற்றவாசிகளால் உருவான நாடு என்றாலும், முறையான குடியேற்றவாதிகள் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றவாதிகள் ஆகியோரின் வேறுபாட்டை ஜனநாயக கட்சி மறைப்பதாக குடியரசு கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். சட்டவிரோத குடியேற்றவாதிகள் குறைந்த கூலிக்கு வேலை செய்வதால், அமெரிக்கக் குடிமக்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக ட்ரம்ப் எதிர்க்கிறார். எனினும், நிறுவன உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மலிவு விலையில் ஆட்களை பயன்படுத்த சட்டவிரோத குடியேற்றத்தை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.
அண்மைக் காலமாக, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, பாகிஸ்தானை விட இந்தியாவுடனான வர்த்தக உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாறி வருகிறது.அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர், “பாகிஸ்தானை விட இந்தியாவுடைய வர்த்தகம்தான் எங்களுக்கு ரொம்ப முக்கியம்” என்று கூறியது, அமெரிக்காவின் நலன்கள் இப்போது இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார சந்தையைச் சார்ந்துள்ளது என்பதை காட்டுகிறது.
பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய பயங்கரவாதிகளை தவிர வேறு எதுவும் இல்லை என்றும், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா கடன் கொடுத்தாலும், இறுதியில் அந்த பணம் திரும்ப வருமா? என்ற சந்தேகத்தையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் அமெரிக்காவின் இந்த திடீர் மாற்றத்தை நிரந்தரமானதாக கருத முடியாது என்றும், அமெரிக்கா தனது நலன்களுக்கு ஏற்றவாறு அவ்வப்போது வேஷம் போடும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், இப்போதுள்ள சூழலில் இந்தியாவுடனான உறவைத் துண்டிப்பது அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்த மாற்றம் வந்துள்ளது.
ஒரு நாட்டின் தாதா போன்ற அதிகாரம் குறையும்போது புதிய தாதாக்கள் உருவாக தொடங்குவது போல, அமெரிக்கா பலவீனமடைந்து வருவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். நட்பு நாடுகளையும் எதிரி நாடுகளையும் சமமாக குட்டுவதால், ஜப்பான் போன்ற நட்பு நாடுகள் கூட ரஷ்யாவுடன் ஒப்பந்தங்கள் குறித்து பேச தொடங்கியுள்ளன.
வெனிசுவேலா, ஈரான், ரஷ்யா போன்ற நாடுகளை அமெரிக்கா தள்ளிவிட்டதால், அவை டாலருக்கு பதிலாகத் தங்கள் சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்ய தொடங்கியுள்ளன. இதனால், அமெரிக்காவின் டாலர் ஆதிக்கம் மெல்ல சரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் இந்தியாவை பகைத்து கொண்ட நாடுகள் மீண்டும் இந்தியாவிடம் சரணடைவது தான் வரலாறு என்ற நிலையில் அமெரிக்காவும் அதே நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
