சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், இந்த படத்திற்கு ஒரு சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அமரன் திரையிடப்படும் தியேட்டர்களில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், நெல்லையில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரில் வெடிகுண்டு வெடித்திருப்பதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிற்காக தன் உயிரை தியாகம் செய்த மேஜர் முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான அமரன், மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களை தீவிரவாதிகளாக காட்டியுள்ளதாக ஒரு சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர்.
அமரன் திரையிடப்படும் தியேட்டர்கள் முன் போராட்டம் நடப்பதாக அந்த அமைப்பு அறிவித்த நிலையில், தற்போது திடீரென அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீசப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டதாகவும், திரையரங்கின் முன் பகுதியில் பெட்ரோல் குண்டை இன்று அதிகாலை மர்ம நபர்கள் வீசி தப்பி சென்று விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, மேலப்பாளையம் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.