பிரபல தொழிலதிபர்கள் தங்களுடைய தினசரி வேலைகளை ஒழுங்குபடுத்த, பெர்சனல் அசிஸ்டன்ட்டுகளை வைத்துக்கொண்டு இருப்பது வழக்கம். இந்த நிலையில், அமேசான் அறிமுகம் செய்துள்ள Alexa+ என்ற வாய்ஸ் அசிஸ்டன்ட், அந்த வேலையை சிறப்பாக செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வாய்ஸ் அசிஸ்டன்ட் செயலி, ஒருவருக்கு புத்திசாலி துணை இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள உணவகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட எந்த கடையை தேட வேண்டுமாயினும், இதன் மூலம் தகவல் கேட்டால், சரியான தகவல்களை உடனடியாக வழங்கும்.
மேலும், கேமரா மூலம் சுற்றுச்சூழலை பகுப்பாய்வு செய்ய முடியும். அசாதாரண செயல்களை கண்டறிந்து, அதன் காட்சிகளை விவரமாக விளக்கவும் செய்யும். அதேபோல், நம்முடைய விருப்பங்கள், வாங்கிய பொருட்கள், பார்த்த வீடியோக்கள், கட்டண முறைகள் ஆகியவற்றை நினைவில் வைத்து, மீண்டும் அவை தேவையான போது ஞாபகப்படுத்தும் திறனும் இதில் உள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள Alexa+, நமது தேவைகளை பூர்த்தி செய்வதோடு, பாதுகாப்பு கருவியாகவும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், PDF கோப்புகள், அட்டவணைகள், நினைவூட்டல்கள் போன்ற எந்த தகவலையும் இதன் மூலம் சேமித்து பயன்படுத்தலாம்.
இதன் உரையாடல் முறையானது மிகவும் புத்திசாலித்தனமாக அமைந்துள்ளது. வேலைகளை சரியாக நிர்வகிக்க, பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட்போன் கட்டுப்பாட்டு வசதியுடன் செயல்படுகிறது. அடுத்த தலைமுறைக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புத்திசாலித்தனமான Alexa+ அனைவரையும் கவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.