நியூயார்க்கில் உள்ள ஒரு வழக்கில், வழக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட நிலையில், வழக்கறிஞருக்கு பதிலாக உருவாக்கப்பட்ட வீடியோவின் மூலம் வாதாடப்பட்டது. இதைக் கண்டுபிடித்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்து, சம்பந்தப்பட்ட நபருக்கு கடும் கண்டனம் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ (AI) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது கிட்டத்தட்ட மருத்துவ கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நியூயார்க் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் சார்பாக வாதாட விரும்புவதாக ஆன்லைனில் வீடியோவின் மூலம் ஒருவர் வழக்கறிஞராக பேசினார்.
அந்த வழக்கறிஞர் வழக்கு குறித்து வாதாடிக் கொண்டிருந்த போது, நீதிபதிக்கு திடீரென சந்தேகம் வந்தது. அவர் உடனே அந்த நபரை அணுகி, “இது உண்மையிலேயே ஒரு மனிதனா அல்லது ஏஐ வீடியோ?” என்று கேட்டார். அதன் பிறகு, அந்த நபர் தான் வழக்கை வாதாடியதைக்ஒப்புக்கொண்டார்.
தனக்காக வாதாட வழக்கறிஞர்கள் யாரும் கிடைக்கவில்லை என்பதால்தான், ஏஐ மூலம் ஒரு வழக்கறிஞரை உருவாக்கி அதன் மூலம் வாதாடியதாகவும், மன்னிப்பு கேட்டதாகவும் கூறினார்.
இந்த பிரச்சனையால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்றாலும், நீதிபதி கோபத்துடன், “நீங்கள் இதைப் பற்றி முன்கூட்டியே எங்களிடம் அனுமதி கேட்டிருந்தால், இத்தகைய வீடியோவை அனுப்பியிருந்தால் கூட நாங்கள் ஒப்புக்கொண்டிருப்போம். ஆனால் எங்களை ஏமாற்றுவது மிகவும் தவறு,” என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், “இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெற்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே 2023ஆம் ஆண்டு, ஏஐ கருவி மூலம் சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்த வழக்கறிஞர்களுக்கு ஐயாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.