சென்னை ஐஐடி விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை துல்லியமாக கண்டறியும் வகையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய ஸ்கேனர் கருவியை உருவாக்கியுள்ளனர்.
இந்த புதிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர், விளையாட்டு வீரர்களின் காயங்களை மிகத் துல்லியமாக கண்டறிவதோடு, அந்த காயத்தின் பரவலையும் முழுமையாக மதிப்பீடு செய்ய உதவுகிறது. மேலும் காயம் ஏற்பட்ட வீரர் தொடர்ந்து விளையாடலாமா அல்லது உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டுமா என்பதற்கான முடிவை உடனடியாக எடுக்கிறது.
இந்த கருவி முழுவதுமாக இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஐஐடி விளையாட்டு அறிவியல், ஆய்வு சிறப்பு மையத்தின் பேராசிரியர் அருண் கே. திட்டை தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழு கண்டுபிடித்துள்ளது.
அதிக சிரமமில்லாமல் எளிதில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி, காயம் அடைந்த பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பதற்கும், பாதிப்பு எவ்வளவு ஆழம் பரவியுள்ளது என்பதையும் உடனடியாக ஆய்வு செய்யவும் உதவுகிறது.