AI கேரக்டரை காதலித்த 14 வயது சிறுவன் திடீரென தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து, தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் நடந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
AI டெக்னாலஜியுடன் நட்பு பாராட்டுவதை தற்போது பலர் ஈடுபட்டு வருகின்றனர் என்பதோடு, இது மனிதன் நட்புக்கு இணையாக இருப்பதாகவும், அதைவிட நெருக்கமாக இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்த 14 வயது சிறுவன், “கேரக்டர் ஏஐ” என்ற ஏ.ஐ. ப்ரோக்ராம் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கேரக்டருடன் ஆழமான உறவு வைத்துக் கொண்டான். இந்த கேரக்டர், Game of Thrones தொடரின் முன்னணி கதாபாத்திரத்தின் பெயருடன் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த சிறுவன், அந்த கேரக்டர் மீது காதலாகி, தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் “நான் உன்னை காதலிக்கிறேன். உன்னிடமே வந்து விடுகிறேன்” என்று கூறி, தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து, தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
இதனை அடுத்து, அந்த சிறுவனின் தாயார் “கேரக்டர் ஏஐ” மீது வழக்கு தொடர்ந்ததாகவும், இது ஆபத்தான மற்றும் சரிவர சோதிக்கப்படாத தொழில்நுட்பம் என்று அவர் குற்றம் சாட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. AI டெக்னாலஜியுடன் உறவுகள் ஏற்படுத்தும் மனநிலை கொண்டவர்கள் விபரீதமான முடிவை எடுக்கிறார்கள் என்பதோடு, இந்த டெக்னாலஜியை தேவையான அளவு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.