இந்தியாவுக்கு எதிராக உளவு சொன்னதாக குற்றஞ்சாட்டப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு தற்போது ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியானாவின் ஹிஸார் மாவட்ட நீதிமன்றத்தில் ஜோதி வழக்கை வழிநடத்த போகும் வழக்கறிஞர் குமார முகேஷ் என்பவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை சமர்ப்பித்தார். ஜோதி தொடர்பான வழக்கின் முதல் விசாரணை ஹிஸார் நீதிமன்றத்தில் ஜூன் 9 அன்று நடைபெறவுள்ளது.
குமார முகேஷ் கூறுகையில், சிறையில் உள்ள ஜோதி வக்கீல் நியமன ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார், தற்போது ஜாமீன் நடவடிக்கையை தொடங்க உள்ளோம் என தெரிவித்தார். வழக்கறிஞரின் தகவலின்படி, வழக்கு தொடர்பான ஆவணங்கள் இன்னும் பெறப்படவில்லை. ஆவணங்களை பெற்ற பிறகு அடுத்தகட்ட ஆலோசனை தொடங்கும் எனவும் கூறினார். மேலும், இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் முழு வழக்கையும் ஆய்வு செய்து, ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.
ஜோதி தந்தை ஹரீஷ் மல்ஹோத்ரா வழக்கை நடத்த குமார முகேஷை அணுகினார் என தெரிகிறது.
வழக்கறிஞர் மேலும் கூறுகையில், ஜோதி தனது யூடியூப் சேனலுக்காக பல்வேறு இடங்களில் வீடியோக்கள் எடுத்து வெளியிட்டுள்ளார். அதேசமயம், விசா மூலம் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளார். மே 26 ஆம் தேதி, நீதிமன்றம் ஜோதி 14 நாட்கள் நீடிக்கும் நீதிமன்ற காவலில் அனுப்பியது. இந்த யூடியூபர், முக்கியமான தகவல்களை பகிர்ந்ததற்கும், தொடர்ந்து பாகிஸ்தானிய குடிமகனுடன் தொடர்பில் இருந்ததற்கும் கைது செய்யப்பட்டார்.
அவரது மீது உள்ள குற்றச்சாட்டுகளின்படி, டெல்லியில் பாகிஸ்தான் அதிகாரியான அஹ்ஸன்-உர்-ரஹீம் என்பவரை சந்தித்து, இரண்டு முறை பாகிஸ்தானுக்கும் பயணம் செய்து, முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். ஆரம்ப விசாரணையின் போது, 2023ல் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தான தூதரகத்துக்கு விசா விண்ணப்பிக்க சென்றதாகவும், அங்கு டானிஷ் என்பவரை சந்தித்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜோதி என்ற தேச துரோகிக்கு ஆஜராவதா என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஜோதி மீது குற்றம் மட்டுமே சாட்டப்பட்டு உள்ளது, இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
அவரது கைது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆவணங்களை நாங்கள் இன்னும் சரிபார்த்து வருகிறோம். ஜோதி ஓடிசாவின் புரி ஜெகந்நாதர் கோவிலுக்கு சென்று அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சிலிக்கா ஏரி மற்றும் கோனார்க் பகுதியையும் அவர் பார்வையிட்டுள்ளார். ஓடிசாவில் உள்ள ஒரு யூடியூபருடன் தொடர்பில் இருந்தார். இவை அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ஹரியானா போலீசுடன் தொடர்பில் இருந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என கூறினார்.