தமிழக அரசியல் களத்தில், ஆளுங்கட்சியான திமுகவை எதிர்க்கும் பிரதான எதிர்கட்சியான அதிமுகவின் செயல்பாடு, அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியிலேயே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்குமா என்ற கேள்விக்கு, தொண்டர்கள் மத்தியிலும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும் ‘முடியாது’ என்றே பதில் எதிரொலிக்கிறது.
இந்த சூழலில்தான், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் வருகை, தமிழக அரசியல் சமன்பாட்டை மாற்றியமைக்கும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அதிமுகவின் பலம், அதன் கோட்டைகளான கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் சற்று ஆட்டம் கண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தற்போது உள்ள அரசியல் சூழலில், திமுகவின் பலமான கூட்டணியை வீழ்த்த, அதிமுகவின் தலைமைக்கு கூடுதல் பலம் தேவைப்படுகிறது. இந்த பலமின்மையே அதிமுக தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக ‘தவெக’ களம் இறங்கியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் இளைஞரணி மற்றும் சில நடுநிலை வாக்குகளை நடிகர் விஜய்யின் கட்சி கொத்து கொத்தாய் தனக்கு ஆதரவாக இழுக்கும் அபாயம் இருப்பதாக அதிமுகவினரே அஞ்சுகின்றனர். இது அதிமுகவின் வெற்றி வாய்ப்பை கடுமையாக பாதிக்கும்.
நீண்டகாலமாக, ஜெயலலிதாவின் இடத்தை நிரப்ப ஒரு மாற்று தலைமை இல்லாத வெற்றிடமே இருந்து வருகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப விஜய்யின் வருகை ஒரு வாய்ப்பாக அமையும் என்று அதிமுகவின் சலிப்புற்ற ஒரு பகுதியினர் நம்ப தொடங்கியிருக்கலாம். திமுகவை எதிர்ப்பதற்கான பலம் அதிமுகவிற்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது. ஆட்சி மாற்றம் நிகழ வேண்டுமெனில், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, விஜய்யின் தவெக-வுக்கு ஆதரவளிக்கும் நிலைக்குத் தள்ளப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.
தவெக தலைவர் விஜய், “தவெக-வின் தலைமையேற்று கூட்டணிக்கு வரும் கட்சிகளுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று அறிவித்துள்ளார். இது, திராவிடக் கட்சிகள் அல்லாத புதிய கூட்டணியை மையப்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கப்போவது, தேசிய கட்சியான காங்கிரஸின் முடிவில்தான் உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதத்தை கொண்டுள்ளது. ராகுல் காந்தி, விஜய்-க்கு தொலைபேசியில் அழைத்து பேசியதாக வெளியான தகவல்கள், ஒரு புதிய அரசியல் சமன்பாட்டிற்கு வழிவகுப்பதாக கருதப்படுகிறது. தற்போதுள்ள திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அதிகார பகிர்வுக்கான வாய்ப்புகள் மிக குறைவு. ஆனால், தவெக கூட்டணிக்கு சென்றால் அதிகாரம் பகிர்தல் என்ற வாய்ப்பு, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
அரசியல் வல்லுநர்களின் கணிப்பின்படி, தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க ஒரு வலுவான திராவிட கட்சிக்கு நிகரான அணி தேவை. திராவிட இயக்கங்களுக்கு எதிரான புதிய வாக்காளர்கள், விஜய்யின் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவில் இருந்து விலகும் வாக்குகள். நிலையான அடித்தளம் கொண்ட காங்கிரஸ் வாக்குகள் மற்றும் சிறுபான்மை சமூக வாக்குகளில் ஒரு பகுதி.
தற்போதைய நிலவரப்படி, தவெக + காங்கிரஸ் என்ற ஒரு கூட்டணி உருவாகி, அது திமுகவின் பலத்தை கணிசமாக குறைத்தால், தமிழகத்தில் ஒரு பலமான ஆட்சி மாற்றத்திற்கான கதவு திறக்கப்படும். ஆகையால், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை மட்டுமே தீர்மானிக்காமல், விஜய் மற்றும் காங்கிரஸின் கைகோர்ப்பை பொறுத்து அமையலாம் என்று அரசியல் களம் பரபரப்பாக எதிர்பார்க்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
