தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் வாசலில் நிற்கிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்சி செய்த இரு பெரும் திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த சூழல், புதிதாக களமிறங்கிய நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துக்கு ஒரு எதிர்பாராத ‘ஜாக்பாட்’ வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது.
1. துண்டு துண்டாகப் போன அதிமுக:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் நிலைமை மிக மோசமாக பலவீனமடைந்துள்ளது. கட்சியின் தலைமை குறித்து ஏற்பட்ட பிளவுகள், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையேயான அதிகார போட்டிகள், அக்கட்சியின் வலிமையை துண்டு துண்டாக உடைத்துள்ளது.
ஒரு வலுவான தலைமை இல்லாததால், அதிமுகவின் தொண்டர்களும், பாரம்பரிய வாக்காளர்களும் மத்தியில் சோர்வும், குழப்பமும் நிலவுகிறது. இந்த ஆளுமை சிக்கல், கட்சியால் இழந்த வாக்குகளை மீண்டும் ஒருங்கிணைக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆளும் கட்சியான திமுக தனது ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சிகளின் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. நிதிநிலை நிர்வாகம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் அரசு துறைகளில் நடப்பதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள், ஆளும் கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குறைத்துள்ளன.
மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் மூலம் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது அவ்வப்போது ஊழல் வழக்குகள் பதிவாவது, தேர்தல் நேரத்தில் அக்கூட்டணிக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் பலவீனம் மற்றும் திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற இரட்டை சுமை, இரு திராவிடக் கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த தேர்தல் முதன்முறையாக இருபெரும் திராவிட கட்சிகளுக்கு எதிரான மனநிலையை வலுப்படுத்தியுள்ளது. இவர்களின் வாக்குகள் பிரிவது, மூன்றாவது ஒரு கட்சிக்கு சாதகமாக அமையும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழக அரசியல் களம் ‘மாற்றுத் தலைமை’க்காக ஏங்கி கொண்டிருந்த சூழலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை ஒரு சரியான நேரத்தில் நிகழ்ந்த ‘ஜாக்பாட்’ ஆக பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுகவின் செயல்பாடுகளில் வெறுப்படைந்த, ஆனால் பாஜக போன்ற தேசிய கட்சியை ஏற்கத் தயங்கும் சுமார் 20% நடுநிலை வாக்காளர்கள் தமிழகத்தில் ஒரு பெரிய சக்தியாக உள்ளனர். இந்த வாக்காளர்கள், எந்த பாரம்பரிய கட்டுக்களுக்கும் உட்படாத, ஒரு புதிய, மாற்று தலைமையை ஆவலுடன் தேடி கொண்டிருந்தனர்.
ஊழலற்ற நிர்வாகம், மக்கள் நல திட்டங்கள் மற்றும் புதிய அரசியல் கலாச்சாரம் ஆகியவற்றை இலக்காக கொண்டு விஜய் அரசியலுக்கு வந்திருப்பது, திராவிட கட்சிகளின்மீது சலிப்படைந்த இந்த நடுநிலை வாக்காளர்களை மொத்தமாகத் தவெகவின் பக்கம் ஈர்க்கிறது.
விஜய்யின் பிரம்மாண்டமான ரசிகர் பட்டாளம், தவெகவை அடித்தளத்தில் வலுப்படுத்தியுள்ளதுடன், முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களின் ஆதரவையும் அள்ளி வருகிறது. இது தவெகவுக்கு திடீரென ஒரு மக்கள் ஆதரவு அலையை உருவாக்கி கொடுத்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சுமார் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் விஜய்க்கு சாதகமாகவே அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக திமுக தனது செல்வாக்கை இழக்க, பிளவு காரணமாக அதிமுக தனது வலிமையை இழக்க, இந்த சூழலில் அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது. இந்த வெற்றிடத்தை விஜய்யை தவிர வேறு எந்தத் தலைவராலும் நிரப்ப முடியாது.
விஜய் தனது கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்ததில் இருந்து அமைதியான முறையில், அடித்தளத்தில் பணியாற்றி வருகிறார். இன்னும் சில மாதங்களில் அவர் தனது தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தும்போது, நடுநிலை வாக்காளர்களின் ஆதரவு மேலும் அதிகரித்து, அது வாக்கு வெற்றியாக மாறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மொத்தத்தில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பலவீனங்களும் விஜய்க்கு சாதகமாக அமைந்து, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் யுகத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
