தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கும் இடையே நிலவும் ஒருவித ‘அரசியல் இணக்கம்’ குறித்த விவாதங்கள் பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, உதயசூரியன் சின்னம் நேரடியாக தாமரை சின்னத்தை 18 தொகுதிகளிலும், அதேபோல் இரட்டை இலை சின்னம் கை சின்னத்தை 18 தொகுதிகளிலும் எதிர்த்து போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தற்செயலானது என்று கடந்து செல்ல முடியாத அளவிற்கு ஒரு துல்லியமான கணக்கீடாக தெரிகிறது. இது அதிமுகவும், திமுகவும் ஆடுகிற Friendly Match தானா என்ற கேள்வி எழுகிறது. அதாவது, தங்களுக்குள் நேரடியாக மோதிக்கொள்ளாமல், தேசிய கட்சிகளை உள்ளே நுழைய விடக்கூடாது என்ற எண்ணம் இருவருக்கும் இருப்பது போல் தெரிகிறது.
கடந்த கால வரலாற்றை உற்று நோக்கினால், இந்த சந்தேகம் வெறும் யூகமல்ல என்பதற்கான சில ஆதாரங்கள் கிடைக்கின்றன. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், திமுகவின் முக்கிய தலைவர்கள் மீது பல ஊழல் புகார்கள் கூறப்பட்ட போதிலும், அவர்கள் மீது உருப்படியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதேபோல், தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், கடந்த கால அதிமுக அமைச்சர்கள் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்குகள் அனைத்தும் நீதிமன்ற படிக்கட்டுகளை தாண்ட முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கின்றன. ரெய்டுகள் நடப்பதும், பின்னர் அவை அமைதியாவதும் ஒரு வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. இது ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் போல செயல்படுகிறதோ என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் தான் விஜய் தனது அரசியல் பிரவேசத்தின் போது முன்வைத்த “இருவரும் மறைமுக கூட்டாளிகள்” என்ற குற்றச்சாட்டு இப்போது மக்கள் மத்தியில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. “ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு” என்று பேசும் புதிய சக்திகளுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதில் இரு திராவிட கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பது போல தெரிகிறது. உண்மையில் ஒருவரை ஒருவர் காப்பாற்றி கொள்ளும் தற்காப்பு உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் மேடைகளில் கடுமையாக சாடிக்கொண்டாலும், அதிகார பகிர்வு என்று வரும்போது இவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே செயல்படுகிறார்கள்.
தொகுதிகளின் ஒதுக்கீடு மற்றும் சின்னங்களின் மோதல் என்பது தரைமட்ட அளவில் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக செய்யப்படும் ஒரு கண்துடைப்பு நாடகமாகவே பார்க்கப்படுகிறது. 18 தொகுதிகள் என்ற அந்த துல்லியமான ஒப்பீடு, தேர்தல் வியூக வகுப்பாளர்கள் அமர்ந்து பேசி முடிவெடுத்த ஒரு திட்டமிட்ட நகர்வாக தோன்றுகிறது. இதன் மூலம் வாக்குகள் சிதறாமல் தங்களுக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்க வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக இருக்கலாம். புதிய மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களை திசைதிருப்ப, இந்த ‘நேரடி மோதல்’ போன்ற பிம்பத்தை இவர்கள் கட்டமைக்கிறார்கள். ஆனால், உண்மையில் இது திராவிட அரசியலின் ஆதிக்கத்தை மாற்றுக் கட்சிகளிடம் இழந்துவிடாமல் இருப்பதற்கான ஒரு கூட்டு முயற்சிதான்.
மொத்தத்தில் 2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, இது தமிழக அரசியலில் பல ஆண்டுகளக தொடர்ந்து வரும் இந்த ‘இருமுனை நாடகத்திற்கு’ ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையுமா என்பதே பெரும் எதிர்பார்ப்பு. ஊழல் புகார்களில் ஒருவரை ஒருவர் காப்பற்றி கொள்வதும், தேர்தலின் போது மட்டும் எதிரிகளாக காட்டி கொள்வதும் வாக்காளர்களை முட்டாளாக்கும் செயல் என்பதை மக்கள் உணர தொடங்கியுள்ளனர். விஜய் போன்ற புதிய வரவுகள் இந்த மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்துவது, பாரம்பரிய கட்சிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. தமிழக அரசியல் வானில் ஒரு புதிய விடியல் பிறக்குமா அல்லது பழைய கூட்டாளிகளே மீண்டும் திரைமறைவில் கைகோர்ப்பார்களா என்பதை வாக்காளர்களின் தீர்ப்பே தீர்மானிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
