உங்க சங்காத்தமே வேண்டாம்.. தொலைத்தொடர்பு துறையில் இருந்து விலகுகிறார் அதானி.. ஏர்டெல்லுக்கு விற்பனை..!

  அதானி குழுமம் இந்தியாவின் போட்டியுள்ள தொலைத்தொடர்பு துறையில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும், 5G ஸ்பெக்ட்ரத்தை ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதானி எண்டர்பிரைசஸ் குழுமத்தின் துணை நிறுவமான Adani Data…

adani

 

அதானி குழுமம் இந்தியாவின் போட்டியுள்ள தொலைத்தொடர்பு துறையில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும், 5G ஸ்பெக்ட்ரத்தை ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதானி எண்டர்பிரைசஸ் குழுமத்தின் துணை நிறுவமான Adani Data Networks, 26 GHz ஸ்பெக்ட்ரத்திலிருந்து 400 MHz அளவிலான பகுதியை பாரதி ஏர்டெல் மற்றும் அதன் துணை நிறுவமான பார்டி ஹெக்ஸகாம் நிறுவனத்திற்கு விற்றுள்ளது. இதன் மூலம், தொலைத்தொடர்பு துறையில் இருந்து அதானி குரூப் விலக முடிவு செய்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு இந்தியாவின் 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்பதன் மூலம் அதானி குழுமம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ரூ. 212 கோடி மதிப்பில் ஸ்பெக்ட்ரம் வாங்கிய அவர்கள், தங்களது துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் நிலையங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையங்களில் தனியார் 5G நெட்வொர்க்குகளை அமைக்கும் திட்டம் வைத்திருந்தனர். இத்திட்டத்தின் நோக்கம், உயர் வேக இணைப்பு மற்றும் தானியங்கி வசதிகளை கொண்டு செயல்பாடுகளை மேம்படுத்துவதாகும்.

ஆனால் 5G நெட்வொர்க்குகளை நடைமுறைப்படுத்தவும் பராமரிக்கவும், சிறந்த தொலைத்தொடர்பு அறிவும், சாதனங்களின் பரிணாம சூழலும், சிறப்பான உள்கட்டமைப்பும் தேவைப்படும். அதானிக்கு இவை கிடைக்காததால், பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலை இருந்தது.

DoT விதிப்படி, 5G ஸ்பெக்ட்ரத்தை பெற்ற பின்னர் ஒரு வருடத்திற்குள் சேவையை வணிக ரீதியில் தொடங்க வேண்டும். ஆனால், அதானியால் சேவையை தொடங்க முடியாததால் விற்பனை செய்ய முடிவு செய்தார். ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் வலிமையான நிலைப்பாடு காரணமாக அதானியால் இந்த துறையில் அதிக போட்டியை ஏற்படுத்த முடியவில்லை.

5G ஸ்பெக்ட்ரம் உரிமையிலிருந்து விலகுவதன் மூலம், இனி அதானி குழுமம் தங்களின் முக்கிய துறைகளான உள்கட்டமைப்பு, ஆற்றல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மீது கூடுதல் கவனம் செலுத்த முடியும். தொலைத்தொடர்பு துறையில் எடுத்த சிறிய முயற்சி துணிச்சலானதாக இருந்தாலும், அது குழுமத்தின் நீண்டகால திட்டங்களுடன் பொருந்தாதது என்பது தற்போது தெளிவாகியுள்ளது.