இங்கிலிஷ்காரன் திரைப்படத்தில் ஒரு காமெடி வரும். சீப்பை எடுத்து ஒளித்து வைத்து திருமணத்தை நிறுத்த முயற்சி செய்வார்கள் வடிவேலு டீம். அதே பாணியில் ஜப்பானில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இங்கு காணமால் போனது சீப்பு அல்ல. கத்தரிக்கோல். அங்கிருந்த கடை ஒன்றில் 2 கத்திரிக்கோல்கள் காணாமல் போனதால் விமான நிலையமே அல்லோலப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சுமார் 2 மணிநேரம் அனைத்து விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் உள்ள நியூ சிட்டோஸ் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கிவரும் ஏர்போர்ட்களில் ஒன்று. இங்குள்ள உள்நாட்டு முனையம் ஒன்றில் பயணிகள் உள்ளே நுழையும் பகுதி அருகே உள்ள கடையொன்றில் இரண்டு கத்தரிக்கோல்கள் காணாமல் போனதாக தகவல் வெளியானது.
விடைபெற்றார் உலகின் மிக அதிக வயது பெண்மணி..பாட்டிக்கு எத்தனை வயசு தெரியுமா?
இதனையடுத்து இந்தக் கத்தரிக்கோல்களை யாரும் குற்றச் செயல்களில் ஈடுபட எடுத்துச் சென்றுள்ளனரா என சந்தேகிக்கப்பட்டு விமான நிலையமே உஷாரானது. அனைத்து பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக சுமார் 2 மணிநேரம் அனைத்து விமானங்களும் தாமதமானது.
சுமார் 36 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 200-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகை, புறப்பாடு ஆகியவை தாமதமானது. இந்நிலையில் விமான நிலையம் முழுக்க அலசி ஆராய்ந்த நிலையில் மறுநாள் காலை ஏர்போர்ட் ஊழியர் ஒருவர் கத்தரிக்கோல்களை அதே கடையில் எடுத்தார். எனினும் காணாமல் போன அதே கத்தரிக்கோல்தானா என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த சனிக்கிழமையன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.