வனத்தை நோக்கிச் செல்லும் அரிசிக் கொம்பன் யானை!

Published:

கம்பம் பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானை வனத்தை நோக்கி செல்வதால் மக்கள் அச்சபட தேவை இல்லை என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 11 பேர் உயிரிழப்புக்கு காரணமான அரிசி கொம்பன் யானை கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தமிழ்நாடு எல்லையில் உள்ள பெரியார் புலிகள் சரணாலயத்தில் விடப்பட்டது. அங்கிருந்து தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்த அரிசி கொம்பன், தோட்டப்பகுதியில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதுடன் கம்பம் நகரத்தில் நுழைந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

மக்கள் பாதுகாப்பு கருதி வரும் 30ஆம் தேதி வரை அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுருளிப்பட்டி, கூத்தாநாச்சி ஆற்றுப்பகுதிகளில் வளம் வந்த அரிசி கொம்பன் யானை தற்பொழுது மேகமலை நோக்கி காப்பு காட்டுக்குள் புகுந்து இருக்கிறது.

அரிசி கொம்பன் யானையை பிடிக்க சுயம்பு, முத்து, உதயன் என மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்த்து செல்பி எடுக்க மக்கள் படையெடுப்பதால் கும்கி யானைகள் வனத்துறை அலுவலகத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளன.

காப்பு காட்டிற்குள் யானை நுழைந்து விட்டதால் கம்பம் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மதிவேந்தன் கூறி இருக்கிறார்

ரேடியோ காலம் கருவியின் மூலம் 3 குழுக்கள் யானையை பின்தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அசாதாரண சுழல் ஏற்பட்டால் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க மருத்துவக்குழுவும் தயார் நிலையில் உள்ளது.

மேலும் உங்களுக்காக...