பலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து 6 வயது சிறுமியை காப்பாற்றிய அனுமன்.. நடந்த அதிசயம்

By Keerthana

Published:

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் பலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து 6 வயது சிறுமியை குரங்குகள் கூட்டம் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் பாக்பத் என்ற கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்குள்ளும் குரங்குகள் கூட்டம் சாதாரணமாக சுற்றி திரிவது வழக்கம். இங்கு அவ்வப்போது அட்டகாசத்தில் ஈடுபடும் குரங்குகளுடன் அந்த கிராம மக்கள் சேர்ந்து வாழ பழகி கொண்டிருக்கினற்ன. குரங்குகள் மூலம் பெரும்பாலும் துன்பத்தையே சந்தித்து வந்த அவர்களுக்கு தற்போது நடந்த ஒரு சம்பவம் , குரங்குகள் பற்றி அவர்களின் பார்வையை மாற்றியுள்ளது.

மீரட் மாவட்டம் பாக்பத் கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி, அவரது வீட்டுக்கு அருகே விளையாடி கொண்டிருந்தார். அச்சமயத்தில் அங்கே வந்த வாலிபர் ஒருவர் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக ஆசைக்காட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றுக்குள் அழைத்து சென்றிருக்கிறார்.

பின்னர் அந்த சிறுமியின் ஆடையை களைந்து பாலத்காரம் செய்ய முயன்றாராம். அப்போது வீட்டை சுற்றி இருந்த மரங்களில் அமர்ந்திருந்த குரங்குகள் உள்ளே ஆவேசமாக புகுந்துள்ளன. ஒரு கட்டத்தில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் மீது அவை பாய்ந்து விரட்டி விரட்டி கடிக்க தொடங்கின. வலியால் அலறித் துடித்த அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அங்கிருந்து தப்பிய சிறுமி வீட்டிற்கு வந்து நடந்ததை தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பலாத்கார முயற்சியில் இருந்து சிறுமியை குரங்குகள் காப்பாற்றியது குறித்து அந்த கிராமத்தில் காட்டுத்தீப்போல பரவி வருகிறது. குரங்குகளின் மனிதநேயத்தை கண்டு மக்கள் மெய்சிலிர்த்து போயிருக்கிறார்கள்..