இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பையில், போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதன் காரணமாக அவ்வப்போது புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இருப்பினும், போக்குவரத்து இன்னும் சிக்கலான நிலையிலேயே உள்ளது என கூறப்படுகிறது.
இந்த நிலையில், மும்பை முழுவதும் புதிய ரிங் ரோடு சாலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், 90 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்படவுள்ள இந்த ரிங் ரோடு சாலைக்கு 58 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மும்பையின் எந்த ஒரு பகுதியில் இருந்தும், இன்னொரு பகுதிக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்குள் சென்று விடலாம் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய ரிங் ரோடு சாலை, நகரின் முக்கிய நகர்ப்புற நெடுஞ்சாலைகள், கடல் வழி மற்றும் காடுகள் உள்ள நெடுஞ்சாலைகளை இணைக்கும் என்றும், இந்த நெட்வொர்க்கின் மூலம் குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு மகாராஷ்டிரா ஆகிய எல்லைகளுக்கு செல்ல எளிதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நவி மும்பை சர்வதேச விமான நிலையம், வாத்வான் துறைமுகம் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகளுக்கு செல்வதற்கு, போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய ரிங் ரோடு சாலை செயல்பாட்டுக்கு வந்த பிறகு, வெகுவாக போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியின் இந்த அறிவிப்பு, மும்பை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மும்பையின் போக்குவரத்து இன்னும் சில ஆண்டுகளில் எளிதாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.