உலகிலேயே மிக மிகப் பழமையான, அதாவது 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான நெய்யப்பட்ட மற்றும் தைக்கப்பட்ட ஆடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ‘தாரிகான் உடை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த உடையை ஒரு எகிப்திய நெசவாளர் உருவாக்கியிருக்கிறார்.
கெய்ரோவுக்கு தெற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாரிகான் என்ற இடத்திற்கு அருகில் ஒரு கல்லறையில் இந்த லினன் ஆடை கண்டெடுக்கப்பட்டது. இதன் காலம், கி.மு. 3482 முதல் 3102 வரை இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, இது எகிப்தின் முதல் வம்சத்திற்கும் முற்பட்டது என்பது ஆச்சரியமான தகவல்.
தொல்லியல் நிபுணர் சர் ஃபிளிண்டர்ஸ் பெட்ரி என்பவர் 1913-ஆம் ஆண்டு முதன்முதலில் இந்த உடையை கண்டுபிடித்தார். இது ஒரு மாஸ்டபா கல்லறையில் ஒரு இறுதி சடங்கின்போது புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இந்த ஆடை மீண்டும் கண்டெடுக்கப்பட்டபோது, அது மிக அற்புதமாக பாதுகாக்கப்பட்டிருந்தது. அதோடு, அந்த காலத்திலேயே எகிப்தியர்கள் ஜவுளி தொழில்நுட்பத்தில் எவ்வளவு மேம்பட்டிருந்தார்கள் என்பதையும் இது வெளிப்படுத்தியது.
லண்டன் யுனிவர்சிட்டி காலேஜின் பெட்ரி அருங்காட்சியகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 1977-ஆம் ஆண்டு விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகம், ஏறக்குறைய முழுமையான தாரிகான் உடையை கண்டறிந்தது. அது லினன் துணியால் தயாரிக்கப்பட்டது. V-கழுத்து, கத்தி மடிப்புடன் கூடிய கைகள் மற்றும் அளவான இடுப்புப் பகுதியுடன் இருந்தது. இது மேலாடையா அல்லது முழு உடையா என்பது நிபுணர்களுக்கு தெரியவில்லை. ஆனால், இது ஒரு மெலிதான இளம் பெண்ணின் உடலில் புதைக்கப்படுவதற்கு முன்பு அணியப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
பழைய எகிப்திய சாம்ராஜ்யத்தின் ஆரம்பகால வம்ச சகாப்தத்தின் சவக்கலைகளில் தாரிகான் உடையின் தோற்றம் காணப்பட்டது. எகிப்தின் வறண்ட தட்பவெப்பநிலை காரணமாகவே இந்த உடை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இது, உண்மையான வரலாற்றுப் பொருட்களை மிக நுணுக்கமாக ஆய்வு செய்வதற்கும், முற்கால நாகரிகங்களில் ஜவுளி உற்பத்திக்கு என்னென்ன படிநிலைகளை பயன்படுத்தினார்கள் என்பதை கண்டறிவதற்கும் அரிய வாய்ப்பை வழங்குகிறது.
உலகிலேயே முதல் முறையாக உடலுக்கு பொருத்தமாக வடிவமைக்கப்பட்ட ஆடை என்ற பெருமையை பெற்ற ‘தாரிகான் உடை’, எகிப்திய கலாச்சாரத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது இது பெட்ரி அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள வரலாற்றாசிரியர்களுக்கும் ஜவுளி வல்லுநர்களுக்கும் இது ஒரு பெரிய உத்வேகமாக திகழ்கிறது.
ஆனால் இதைவிட பழமையான தைக்கப்பட்ட ஆடை கீழடியில் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.