2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல், இதுவரை நடந்திராத ஒரு வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்றும், தமிழகத்தில் முதல்முறையாக தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பல அரசியல் வியூக நிபுணர்கள் தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், எந்த கட்சியும் முன்பு போல தனிப்பெரும்பான்மை பெறாது என்பதுதான். இதுவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி பலத்தின் மூலம் வெற்றி பெற்றாலும், தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் அறுதிபெரும்பான்மை பெற்றன. அப்படி கூட தி.மு.க. ஒருமுறை தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இனிமேல் இந்த கூட்டணி கட்சிகளை ஏமாற்ற முடியாது என்பதும், அதேபோல் பலவீனமடைந்து வரும் அ.தி.மு.க.வும், மக்கள் மத்தியில் எதிர்ப்புகளை சந்தித்து வரும் தி.மு.க.வும் இனி தனிப்பெரும்பான்மை பெற வாய்ப்பே இல்லை என்றுதான் நடுநிலை அரசியல் வியூக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே, 118 என்ற மேஜிக் நம்பரை இரண்டு திராவிட கட்சிகளும் எட்ட வாய்ப்பு இல்லை என்றும், கூட்டணி கட்சிகளின் தயவால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்றும், அப்படி ஆட்சி அமைக்கும் போது முன்பு போல கூட்டணி கட்சிகள் ஏமாளியாக இல்லாமல், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
எனவேதான், இனிமேல் தமிழ்நாட்டில் எந்த கூட்டணி வெற்றி பெற்றாலும், கூட்டணி அரசாங்கம்தான் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் அதில் பா.ஜ.க. அமைச்சரவையில் இடம்பெறும் என்றும், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவைகளில் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் விஜய் பற்ற வைத்த நெருப்புதான். விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் கூட்டத்தில், “நாம் இறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தாலும், நம்முடன் இருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவைகளில் பங்கு தருவோம்” என்று விஜய் தெரிவித்தார். அவர் காட்டிய இந்த ஆசைதான் தற்போது திராவிட கட்சிகளில் உள்ள கூட்டணி கட்சிகளுக்குள் பற்றியது. “விஜய் இவ்வாறு சொல்கிறார், அதனால் நீங்களும் ஆட்சியில் பங்கு பெற வேண்டும்” என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. ஒருவேளை அ.தி.மு.க. அல்லது தி.மு.க. 118 என்ற மேஜிக் நம்பரைப் பெற்றுவிட்டால் கூட்டணி ஆட்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால், இல்லையென்றால் கண்டிப்பாக அமித்ஷா சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இனி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் நடக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
கூட்டணி ஆட்சி என்பது ஒரு விதத்தில் மக்களுக்கு நல்லதுதான். ஒரே கட்சி ஆட்சியில் இருக்கும்போது, அமைச்சர்கள் தவறு நடந்தால் அவர்களுக்குள் மறைத்து கொள்கிறார்கள். ஆனால், கூட்டணி அரசில் ஒரு கட்சியின் அமைச்சர் தவறு செய்தால், இன்னொரு கட்சியின் அமைச்சர் அதை சுட்டி காட்டுவார். எனவே, அமைச்சர்களும் கவனமாகச் செயல்படுவார்கள் என்றும் நடுநிலை அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் முதன்முதலாக கூட்டணி அமைச்சரவை ஏற்படுமா? இதுவரை ஒரே கட்சி ஆட்சி அமைக்கும் வகையில் தெளிவாக வாக்களித்த மக்கள், முதல்முறையாக தொங்கு சட்டசபை அமைக்கும் அளவுக்கு வாக்களிப்பார்களா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
