பாஜக தமிழ்நாட்டில் உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காக, 2021 ஆம் ஆண்டு தேர்தலில் ஆறு தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம். ஆனால் 2026 தேர்தலில் 15 தொகுதிகளை பெறுவதுதான் எங்கள் இலக்கு. “2021-ல் ஏமாந்தோம், 2026 ல் ஏமாற மாட்டோம்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி அப்படியே சிதறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த கூட்டணியில் சில சலசலப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. திமுக ஏற்கனவே 200 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும், 34 தொகுதிகளை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிருப்தியடைய வாய்ப்பு உள்ளது.
2001 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் பெற்ற, 2006 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகள் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 2021-ல் வெறும் 6 தொகுதிகளுக்கு மட்டுமே ஒப்புக்கொண்டது. ஆனால் இந்த முறை 15 தொகுதிகளை பெறுவதுதான் எங்கள் இலக்கு, மேலும் இரட்டை இலக்கத்தில் சீட் பெறுவது நிச்சயம் எனவும் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
கவர்னரையும் பாஜகவையும் எதிர்ப்பதற்காகத்தான் திமுக எங்களை பயன்படுத்திக் கொள்கிறது, ஆனால் அதற்குரிய அங்கீகாரம் தரவில்லை என விசிக நிர்வாகிகள் வெட்டவெளிச்சமாக பேச தொடங்கி விட்டனர்.
மேலும், “ஆட்சியில் பங்கு” என்ற புதிய கோஷத்தையும் இந்த தேர்தலில் முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில், விசிக கூட்டணியை மாற்றாது, திமுக கூட்டணியிலேயே தனது வலிமையை நிரூபித்து, அதிக தொகுதிகளை கேட்டு பெறும் என கட்சியின் சில பிரபலங்கள் தெரிவிக்கின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் அதிக தொகுதிகளை கேட்டால், காங்கிரஸ், மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட அதிக தொகுதிகளை எதிர்பார்க்கும் என்பதால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படுவது உறுதி என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.