1000 கிமீ தூரத்தில் ஒரு வந்தே பாரத் ரயில்..  11 மணி நேரம் தான் பயண நேரம்..!

By Bala Siva

Published:

 

தீபாவளி ஸ்பெஷல் ஆக அக்டோபர் 30ஆம் தேதி மிக நீளமான தூரத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க இருப்பதாகவும், 1000 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இந்த வந்தே பாரத் ரயில் பயண நேரம் 11.35 மணி நேரம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது என்பதும், இந்த ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இதுவரை மிக நீளமான வந்தே பாரத் ரயில் டெல்லி முதல் வாரணாசி வரை 771 கிலோமீட்டர் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது டெல்லி முதல் பாட்னா வரை 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு அக்டோபர் 30ஆம் தேதி ஒரு வந்தே பாரத் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேசம் வழியாக செல்லும் இந்த ரயில், டெல்லியில் இருந்து பாட்னா செல்வதற்கு வெறும் 11.35 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்வது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ரயில் புதுடெல்லியில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிறு, மற்றும் பாட்னாவில் இருந்து திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் இயக்க திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் இருந்து காலை 8:05-க்கு கிளம்பும் இந்த ரயில், பாட்னாவுக்கு இரவு 8 மணிக்கு சென்று அடையும் என்றும், அதேபோல் பாட்னாவில் இருந்து காலை 7:30 மணிக்கு கிளம்பும் ரயில் டெல்லிக்கு இரவு 7 மணிக்கு சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலில் பயணம் செய்ய ரூ. 2,575 கட்டணம் என்றும், எக்சிகியூட்டிவ் பிரிவில் பயணம் செய்ய கட்டணம் ரூ.4,655  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.