தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், திருச்சி மற்றும் நாமக்கல்லை தொடர்ந்து தனது அரசியல் பயணத்தை கரூர் மாவட்டத்தில் தொடங்கினார். அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கரூருக்கு பெருமை சேர்க்கும் பல விஷயங்கள் இருந்தாலும், சமீபகாலமாக ஒரே ஒரு பெயர் மட்டுமே பிரபலம் அடைந்து வருகிறது என்று கூறிய அவர், அந்தப் பெயர் யாருடையது என்பதை மறைமுகமாக குறிப்பிட்டு காட்டினார். அவர் பேசிய முக்கிய அம்சங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
விஜய் தனது உரையில், திமுக அரசு கரூரில் கொடுத்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு விமர்சித்தார். “பேரீச்சை வளர்க்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்” என்ற வாக்குறுதியைச் சுட்டிக்காட்டி, “பேரீச்சம் விதையையாவது கண்ணில் காட்டினார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
அடுத்தபடியாக, “கரூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற வாக்குறுதி குறித்து பேசுகையில், “ஆட்சி முடிய போகும் நிலையில் இப்போதுதான் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைப்பதாக அமைச்சர் கூறுகிறார். இதுதான் உங்க டக்கா? என்று விமர்சித்தார். அதே சமயம், விமான நிலையம் அமைப்பது ஜவுளி தொழிலுக்குப் பயனளிக்கும் என்றாலும், பரந்தூர் விமான நிலையம் போல மக்கள் பாதிக்காத வகையில் திட்டமிட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி என்று கூறிய விஜய், இது கரூரை வறண்ட மாவட்டமாக மாற்றிவிட்டது என்றும், சட்டவிரோத கல் குவாரிகள் கனிம வளங்களை அழித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். “2026-ல் மணல் கொள்ளையர்களிடமிருந்து வரும் பணத்தை கொண்டு தமிழக மக்களை விலைக்கு வாங்கலாம் என்று கனவு காண்பவர்களிடமிருந்து காவிரி தாய்க்கும், கரூருக்கும் விடுதலை வேண்டுமா, வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், கரூரில் உள்ள பஞ்சப்பட்டி ஏரி குறித்துப் பேசிய அவர், பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் உள்ள இந்த ஏரிக்கு தங்கள் ஆட்சி வந்ததும் உயிர் வரும் என்று உறுதியளித்தார்.
“கரூருக்கு வந்துவிட்டு, ஒரு முக்கியமான பிரச்சனையின் காரணத்தை பற்றி பேசாமல் போவது சரியாக இருக்காது,” என்று கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக சாடினார். “மந்திரியாக இருந்தவர், இப்போது மந்திரி இல்லை என்றாலும் மந்திரி மாதிரி,” என்று கூறிய விஜய், “பாட்டிலுக்கு பத்து ரூபாய்” என்று பாட்டு பாடி அவரை அடையாளம் காட்டினார்.
சமீபத்தில், முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சரை புகழ்ந்து பேசியதையும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவரே அவரை கடுமையாக விமர்சித்ததையும் சுட்டிக்காட்டினார். “திமுக குடும்பத்திற்கு ஊழல் பணத்தை 24×7 டெலிவரி செய்யும் ஏடிஎம் இயந்திரமாக அவர் இருக்கிறார்” என்று மக்கள் பேசுவதாக விஜய் தெரிவித்தார்.
கடைசியாக, காவல்துறையினர் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கண்டித்த அவர், “காவலர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் தான் எஜமானர்கள். இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாறும், காட்சி மாறும். அப்போது மக்களுக்கு முழுமையான சுதந்திரமும் பாதுகாப்பும் கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
