10 நிமிடத்தில் வந்த 15 வாட்ஸ் அப் கால்.. மாரடைப்பில் உயிரிழந்த ஆசிரியை.. அதிர்ச்சி தகவல்..!

By Bala Siva

Published:

 

ஆக்ரா நகரை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு பத்து நிமிடங்களில் 15 வாட்ஸ் அப் கால் வந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆக்ராவைச் சேர்ந்த 55 வயது அரசு பள்ளி ஆசிரியை மாலதி வர்மா என்பவர் செப்டம்பர் 30ஆம் தேதி வாட்ஸ் அப் கால் அழைப்பு ஒன்றை பெற்றார். அந்த அழைப்பில் அவரது 20 வயது மகள் பாலியல் பிரச்சனைகளில் சிக்கியுள்ளதாக, போலீசார் போல மோசடிக்காரர்கள் போன் செய்துள்ளனர்.

இந்த பாலியல் விவகாரம் வெளியே வராமல் இருக்க வேண்டும் என்றால் ஒரு லட்ச ரூபாய் பணம் அனுப்ப வேண்டும் என்று கேட்ட நிலையில், அவர் பணம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து, “உங்கள் மகளின் பாலியல் வீடியோவை இணையதளத்தில் பரப்புவோம்” என்று மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டல் காரணமாக பதட்டம் அடைந்த ஆசிரியர் மாலதி திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, அதன் பின் சிகிச்சையின் பலன் இன்றி மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஆசிரியை மாலதியின் மகன் கூறியபோது: “எனது தாயார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். செப்டம்பர் 30 அன்று திடீரென அவருக்கு வாட்ஸ் அப் கால் வந்தது. என் தங்கை பாலியல் சிக்கலில் இருப்பதாக கூறி மிரட்டினர். 15 நிமிடங்களுக்குள் அவருக்கு 10 போன் அழைப்பு வந்ததை அடுத்து அவர் பதட்டம் அடைந்தார். இதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சையின் பலன் இன்றி இறந்துவிட்டார்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.