நாம் கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட்டு இருப்போம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்த நாள்.
அதே போல் உகந்த மலர், உகந்த விளக்கு என்று தனித்தனி அடையாளங்கள் உள்ளன. அதன்படி பக்தர்கள் வழிபடுவதால் தோஷங்கள் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுகின்றனர்.
வீடுகளில் இந்த நியதி எவ்வாறு பின்பற்றப்பட வேண்டும் என்பதில் பலருக்கும் பலவித கருத்துகள் உலாவுகின்றன.
பொதுவான கருத்து எது என்று நாம் பார்க்கலாம்.
தினமும் அதிகாலையில் விளக்கேற்றி விட வேண்டும். அதாவது 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றியிருக்க வேண்டும். இதே போல் மாலை 6 மணிக்கு விளக்கேற்றி விட வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் விளக்கேற்றுவது உத்தமம்.
அது சரி. இதனால் நமக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? பக்தர்கள் எப்போதுமே ஏதாவது ஒரு வேண்டுகோளை மனதில் கொண்டே கடவுளை வழிபடுகின்றனர். அதை கடவுளும் தவறாமல் நிறைவேற்றி விடுகிறார்.
சிலர் ஆண்டவன் நம்மை மட்டும் ஏன் தான் இப்படி சோதிக்கிறானோ என்று புலம்புவதுண்டு. ஆனால் கடவுள் இதற்கு முன் நல்லது செய்துள்ளது அவர்களது கண்ணுக்குத் தெரிவதில்லை. கடவுளுக்கு நன்றியும் சொல்வதில்லை. ஆனால் குறை வந்துவிட்டால் மட்டும் கடவுள் மீது எளிதில் பழிசுமத்தி விடுகின்றனர்.
தவறாமல் அதிகாலையிலும் அந்தி சாய்ந்த பின்பும் விளக்கேற்றுகையில் குடும்பத்தில் ஒற்றுமையும், மன அமைதியும், நிம்மதியும் கிடைக்கும். இந்தக்கருத்தை யாரும் விதாண்டவதாதம் செய்யாமல் தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கு நீங்கள் வணங்கும் கடவுள் காலத்தின் உருவில் வந்து பாடம் நடத்த ஆரம்பித்து விடுவார்.
அதேபோல் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை என்றால் கட்டாயம் இதை பின்பற்றுங்கள். அதாவது, ஒருநாளுக்கு முன்பே விளக்கையும், மேடையையும் நன்றாகக் கழுவி சுத்தம் செய்து விடுங்கள். இதைச் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஆம். பெரும்பாலான வீடுகளில் சீதேவிக்குப் பதில் மூதேவி குடியிருக்கிறாள் என்பார்கள். அது நம்மை எப்போதும் தூங்கச் செய்து சோம்பேறியாக்கி விடும். அந்தத் தரித்திரம் நம்மை விட்டு விலகி விடுமாம்.
இனி செவ்வாய் வெள்ளி மட்டும் இல்லாமல் எல்லா நாள்களிலும் இந்த நேரத்தைப் பின்பற்றி விளக்கேற்றுவோம். வீடுகளில் சுபிட்சம் தங்கட்டும். மகாலெட்சுமி வருகை தரட்டும். மங்களம் உண்டாகட்டும்.