நாம் தினமும் காலையில் எழுகிறோம். அன்றாட கடமைகளைச் செய்கிறோம். இரவில் தூங்குகிறோம். இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இடையில் நமக்கு ஏதாவது சலிப்பு வந்து விட்டால் எங்காவது சுற்றுலா செல்கிறோம். ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது. படைப்பாளிகள் தினமும் ஒரு படைப்பை படைப்பதால் புத்துணர்வு பெறுகிறார்கள்.
கலையை ரசிப்பவர்கள் தனது திறமையை அதில் காட்ட முற்படுகிறார்கள். உதாரணமாக ஓவியர்கள் கற்பனை தேரினில் வலம் வந்து பிரம்மாண்டமான கலைநயமிக்க ஓவியத்தைப் படைத்ததும் அவர்கள் திறமை பளிச்சிடுகையில் நாலு பேர் பாராட்டுகையில் புத்துணர்வு பெற்று தனது அடுத்த கலைப்படைப்பைத் தொடங்கி விடுகிறார்கள். இப்படி தான் இசை, நடனம், சிற்பம் என எல்லாக்கலைகளும் தத்தம் பங்கை வகித்து செவ்வியல் வாழ்வில் ஈடுபடச் செய்கின்றன.
என்ன தான் இருந்தாலும் ஒரு சிலருக்கு நாள்கள் நகர நகர வயது ஏற ஏற… மனதுக்குள் ஒரு பயம் தொற்றிக் கொண்டு விடுகிறது. அவர்கள் வாழ்க்கையின் இறுதிநாள்களை எண்ண ஆரம்பித்து விடுகின்றனர். இவ்ளோ நாள் என்ன ஆட்டம் போட்டோம்? எவ்வளவு சிக்கல்களை சமாளித்தோம்?
எவ்வளவு பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டோம்? எவ்வளவு அடி? எவ்வளவு வலி..? எவ்வளவு அவமானம்? எவ்வளவு மருத்துவம்..? என கடந்த கால நினைவுகளை அசை போடுகின்றனர். அந்த பொற்கால நினைவுகள் பால்ய காலம் முதல் தளர்ந்த காலம் வரை நீண்டு கொண்டே போகிறது.
ஒரு வேளை இன்னும் நாம் நிறைய சாதித்து இருக்கலாமே? பல நாள்களை வீணாகக் கழித்து விட்டோமோ..? என்ற ஏக்கமும் தென்படுகிறது. அந்த ஏக்கத்தை இனியாவது பூர்த்தி செய்து விட முடியுமா? ஆனால் உடல் ஒத்துழைக்காதே என ஆற்றாமையும் மனதுக்குள் தென்படுகிறது.
அதே நேரம் விருப்பு, வெறுப்பு கடந்த வாழ்க்கையைத் தேடி மனம் ஓடிக்கொண்டு இருக்கிறது. உறவுகள், நட்புகள் எல்லாம் ஒரு கட்டத்தில் கசந்து விடுகிறது. தினமும் படுத்தால் உடனே தூக்கம் வர மறுக்கிறது. ஆனால் உருண்டு புரண்டு கொண்டே இருக்கிறோம். அதிகாலையில் துயில் எழுந்து விடுகிறோம். மனதுக்குள் கடந்து போன தோல்விகளை எண்ணி புழுங்கித் தவிக்கிறோம். இதற்கெல்லாம் ஒரே வழி இது தான். எப்போதும் நல்ல எண்ணங்களை மனதிற்குள் விதைக்க வேண்டும்.
யாம் எது செய்தாலும் நன்மைக்கே என்று எண்ண வேண்டும். நாள்கள் உருண்டோடுவதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நாள்களை எப்படி கழித்தீர்கள்? பயனுள்ளதாக மாற்றினீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அந்த நாளில் நாம் முடிந்தவரை யாருக்காவது சிறு உதவியாவது செய்துள்ளோமா என்றால் அந்த நாள் நமக்கு பொன்னான நாள் தான்.
கடன், பிரச்சனை, அவமானம், தோல்வி இவற்றையே சிந்தித்து மனம் பரிதவித்து பொன்னான வாழ்க்கையைப் புரட்டி எடுத்து விடாதீர்கள். உங்களுக்கு என்று ஒரு அழகான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. உங்களைச் சுற்றி நடக்கும் இயற்கையின் எழிலைக் கண்டு அவ்வப்போது ரசியுங்கள். முடிந்தளவு தானம் செய்யுங்கள். தியானம் செய்யுங்கள். அது போதும். உங்களை இன்னும் கொடையாளி ஆக்கும். உங்கள் மனதை இன்னும் பலப்படுத்தும்.
அனைவரிடமும் புன்முறுவலோடு பேசிப் பழகுங்கள். இது பார்ப்பதற்கு சாதாரணமாகத் தான் இருக்கும். ஆனால் இது ஒரு பெரிய கலை. அது எப்போதும் உங்களை நல்வழிக்கு இட்டுச் செல்லும். நேரிய பார்வை வேண்டும். இது உங்களை எப்போதும் நேர்மையுடன் கம்பீரமாக நடக்கச் செய்யும். கண்ணோடு கண் நோக்கி பேசுங்கள். நம்மை விட உயர்ந்த அதிகாரிகளையோ, பணக்காரர்களையோ கண்டு கூழைக் கும்பிடு போடாதீர்கள். உங்கள் நம்பிக்கையையும், நாணயத்தையும் அவர்களுக்குத் தெரியும் வகையில் செயலில் காட்டுங்கள்.
எந்த இடத்திலும் நாம் நம்மைத் தாமே தரம் தாழ்த்திக் கொள்ளக் கூடாது. யாரிடமும் நமது ஆற்றாமையைப் பற்றிப் பேசக் கூடாது. நம்முடைய வெற்றிகளைப் பகிர்ந்து கொள்ளலாம். தோல்வியால் துவண்ட கதையை இனியும் சொல்ல வேண்டாம். அது உங்களை எளிதில் இனம் கண்டு கொள்ளச் செய்துவிடும். அதனால் வரப்போகும் ஆபத்து உங்களுக்கே வந்து சேரும். உங்களை விட மெலியவர் கூட உங்களைக் கேலி பண்ணும் நிலைமைக்கு ஆளாக்கி விடும்.
மொத்தத்தில் வாழ்வை எளிதாகக் கொண்டு செல்ல… உங்களை நேசியுங்கள். உங்கள் உடலை நேசியுங்கள். உங்கள் திறமையை நேசியுங்கள். அவற்றிற்கு தேவையான நல்ல விஷயங்களை அவ்வப்போது செய்து வாருங்கள். தினமும் என்னைக் கவனி என்ற தாரக மந்திரத்தை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மனதை எப்போதும் பூப்போலக் கையாளுங்கள்.
இனியும் கடந்த நாள்களைப் பற்றிக் கவலை கொள்ளாது வாழ்கின்ற நாள்களை நல்லபடியாக வாழ்ந்து வளமும் நலமும் பெற்று வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்குவோம்.