குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை கொடுக்கலாமா? என்னென்ன உணவுகளை கொடுக்கலாம்?

By Sowmiya

Published:

குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம். அவர்களுக்கு என்ன உணவினை கொடுப்பது? அதை எப்படி கொடுக்க வேண்டும்? எந்த நேரம் அதற்கு சரியான நேரம்? எந்த சுவையில் கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்? என அனைத்தையும் சிந்தித்து உணவு தயாரிக்க வேண்டி இருக்கும். ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு பிறகு திட உணவினை அறிமுகம் செய்தல் வேண்டும். வேக வைத்த காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை மசித்து குழந்தைகளுக்கு ஊட்ட ஆரம்பிக்கலாம்.

baby eat n.v2

 

இப்படி காய்கறி, பழங்கள், தானியங்கள், அரிசி வகைகள் இவற்றை உணவாக வழங்கும் பல பெற்றோர்களுக்கு எப்பொழுது இருந்து அசைவ உணவை ஆரம்பிக்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கும்.

baby eat n.v

குழந்தைக்கு 9 மாதம் நிறைவடையும் வரை எந்தவிதமான அசைவ உணவுகளையும் கொடுக்கக் கூடாது. ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த பின்னர்  அசைவ உணவினை கொடுக்க முட்டையிலிருந்து தொடங்கலாம். முட்டையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. எடுத்த உடனேயே முழு முட்டையையும் வேகவைத்து கொடுக்காமல் வேக வைத்த முட்டையின் சிறு பகுதியை மட்டும் கைகளால் மசித்து குழந்தைக்கு கொடுத்துப் பாருங்கள். குழந்தையின் உடல் அந்த முட்டையை ஏற்றுக் கொண்டால் அதன் பின் கொடுக்கத் தொடங்கலாம்.

குழந்தைக்கு உணவு ஊட்டிவிடுவது தான் நல்லதா??? உங்கள் குழந்தையை தானாக உணவு உண்ண பழக்குவது எப்படி?

இரவு நேரத்தில் எப்பொழுதும் முட்டையை கொடுக்கக் கூடாது பெரும்பாலும் காலை உணவின் பொழுதோ அல்லது மதிய உணவின் பொழுதோ இந்த முட்டையை கொடுக்கலாம். ஒருவேளை உங்கள் குழந்தை முட்டையை விரும்பி சாப்பிடாவிட்டால் அவர்களுக்கு அந்த முட்டையின் வாசனை அல்லது சுவை பிடிக்காமல் இருக்கலாம் இதனால் கவலை வேண்டாம் முட்டையை வேறு விதமான சுவையில் செய்து கொடுத்துப் பாருங்கள். ஒரு வயது ஆன குழந்தைகள் என்றால் குறைந்த மசாலாக்கள் சேர்த்த முட்டை, பொடிமாஸ் அல்லது ஆம்லெட் மாதிரி முட்டைகளை செய்து கொடுக்கலாம்.

baby eat n.v4

ஒரு வயது ஆன பின்னர் மீன், சிக்கன் ஆகியவற்றை கொடுக்கத் தொடங்கலாம். இவற்றில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன. சிக்கனை கொடுக்கும் பொழுது சிக்கன் துண்டுகளை கொடுக்காமல் அதனை சூப்பாக வைத்து அந்த சூப்பினை மட்டுமே கொடுக்கலாம். வறுத்த, பொரித்த மீன்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். வேக வைத்த மீன்களை கொடுப்பது சிறந்தது. சிக்கன் மற்றும் மீன் கொடுக்கும் பொழுதும் இரவு நேரத்தில் கொடுப்பதை அறவே தவிர்த்து விட வேண்டும் மதிய உணவின் போது கொடுக்கலாம். ஏனெனில் குழந்தைகளின் செரிமான மண்டலத்திற்கு இவற்றை செரிக்கும் ஆற்றல் குறைவாக இருக்கும்.

baby eat n.v 3

இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டன் உணவுகளை கொடுக்க வேண்டாம். ஆட்டு இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்புகள் இருக்கும் எனவே இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் ஆட்டின் ஈரல், ஆட்டுக்கால் சூப், நெஞ்செலும்பு சூப் போன்றவற்றை கொடுக்க ஆரம்பிக்கலாம்.

சில குழந்தைகளுக்கு அசைவ உணவின் மணமோ அல்லது சுவையோ பிடிக்காமல் இருக்கலாம். ஆரம்பத்தில் ஒரு குழந்தை அசைவ உணவை மறுத்தால் பின்னாளில் அது அசைவம் சாப்பிடாது என்றோ, அல்லது அசைவ உணவை சாப்பிட்டால் தான் உடலுக்கு சத்து என்று நினைத்தோ குழந்தையை உணவு விஷயத்தில் கட்டாயப்படுத்த வேண்டாம். குழந்தைகளின் சுவை மாறிக் கொண்டே இருக்கும் சில குழந்தைகள் ஆரம்பத்தில் மறுக்கும் உணவை பின்னாளில் விரும்பியும் சாப்பிடலாம். எந்த உணவையும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கத் தொடங்குங்கள். மாலை 5 மணிக்கு மேல் அசைவ உணவுகள் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

மேலும் உங்களுக்காக...