ஆபீஸ்ல கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு வந்து ஓய்வெடுக்கறதுக்காக வீட்டுக்கு வர்றோம். இங்கேயும் ஒரே சண்டை. நிம்மதி இல்லன்னா எப்படி? அதுக்கு முக்கிய காரணம் கோபம்தான். அது எப்படி எல்லாம் வருது? எத்தனை வகை? எந்த கோபத்துல சிக்கல்னு பாருங்க…
டென்ஷனால் கோபம்
இந்த வகையான கோபம் எந்த கல்யாண வாழ்க்கையிலும் தவிர்க்கவே முடியாது. உங்கள் பணியிடத்தில் ஏற்பட்ட மனஅழுத்தத்தை, உங்கள் வாழ்க்கைதுணை மேல் எரிந்து விழுந்து தீர்த்து கொள்வீர்கள். உங்களுக்கு மூட் அவுட்டானால், உங்கள் வாழ்க்கைத்துணையிடம் கோபித்து கொள்வீர்கள்.இத்தகைய கோபங்கள் எளிதில் தீர்ந்து விடும். உங்கள் இருவர் இடையே பிரச்சனைகள் ஏற்படுத்தாமல் சில மணி நேரத்தில் மறைந்து விடும்.
பிள்ளைகளால் கோபம்
பிள்ளைகள் உங்களுக்கு சந்தோசத்தை மட்டும் கொடுப்பதில்லை. அவர்களால் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் இடையே கோபங்கள் ஏற்படும். பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்ற வேறுபாட்டில் ஏற்படும் கோபம் பல குடும்பங்களில் சகஜமானது. பிள்ளைகள் தவறு செய்யும் போது, உன் வளர்ப்பால் தான் இது நேர்ந்தது என்று இருவரும் கோபத்தில் மோதி கொள்வீர்கள். இத்தகைய கோபமும் உங்களிடையே பிளவை ஏற்படுத்தாது.
பெற்றோரால் கோபம்
பல குடும்பங்களில், பெற்றோர் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, கணவன் மனைவி இடையே பூகம்பத்தையே ஏற்படுத்தி விடுவார்கள். பெற்றோரால் ஏற்படும் கோபம், திருமண வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வல்லமை உடையது.
நண்பர்களால் கோபம்
உங்கள் வாழ்க்கைத்துணைக்கு தெரியாமல் உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் செய்யும் பணஉதவி, இருவர் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கைத்துணையிடம் நேரத்தை செலவழிக்காமல், உங்கள் நண்பர்களோடு பொழுதை நீங்கள் கழித்தால், கண்டிப்பாக உங்கள் இருவர் இடையே சண்டை மூளும். இத்தகைய கோபம், உங்கள் இருவர் இடையே தேவையில்லாம பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வெறுப்பால் கோபம்
உங்களுக்கு உங்கள் வாழ்க்கைத்துணை மேல் வெறுப்பு ஏற்பட்டால், அவர் நின்னால் குற்றம், நடந்தால் குற்றம் என்று கோபப்பட்டு கொண்டே இருப்பீர்கள். உங்கள் வெறுப்பான வார்த்தைகள் உங்கள் வாழ்க்கைத்துணை மனதை குத்தி கிழிக்கும். வெறுப்பால் ஏற்படும் கோபம்,
உங்கள் திருமண வாழ்க்கையை அழித்து விடும். உங்கள் வாழ்க்கைத்துணை மேல் நீங்கள் கோபப்படலாம். ஆனால், உங்கள் கோபம் அவருக்கு அவமானத்தை ஏற்படுத்த கூடாது. பனி போல் மறையும் கோபம், உங்கள் இருவர் இடையே காதலை வளர்க்கும். தொடரும் அர்த்தமற்ற கோபம் உங்கள் திருமணவாழ்க்கையை நிர்மூலம் ஆக்கும்.