அன்றாட தேவைக்கான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சேகரித்து வைக்க பிரிட்ஜ் பயன்படுகிறது. அவ்வாறு சேமித்து வைக்கும் போது, சில வீடுகளில் உள்ள பிரிட்ஜில் இருந்து துர்நாற்றம் வீசுவதை தவிர்க்க முடியாததாக இருக்கும். ப்பா… பிரிட்ஜை திறந்தாலே நாற்றம் தாங்க முடியலையே என நொந்துபோகும் இல்லத்தரசிகளுக்குக்கான எளிமையான சில வழிமுறைகள் இதோ…
துர்நாற்றம் வீசக்காரணங்கள்:
நீண்ட நேரம் பவர் கட் ஏற்பட்டால் பிரிட்ஜ்ஜில் உள்ள ஐஸ் கட்டிகள் உருகி தண்ணீர் வடிய ஆரம்பித்து விடும். இவை அப்படியே நீங்க வைத்த காய்கறி டப்பா, பிரிட்ஜ் தட்டில் தேங்கி காய்கறிகளை சீக்கிரம் அழுகி போக வைத்து விடும். இதனால் துர்நாற்றம் வீசும். எனவே முதலில் தண்ணீரை சுத்தப்படுத்த முயலுங்கள்.
அடிக்கடி ஐஸ் கட்டியை ரீமூங் செய்யுங்கள். இதற்கு பிரிட்ஜில் கொடுத்த டிஃபாரஸ்ட் பட்டனை அழுத்தலாம்.
தோசை மாவு இருக்கிறதிலயே அதிக துர்நாற்றத்தை வீசக் கூடியது. ஏனெனில் மாவு புளிக்கும் போது புளித்த துர்நாற்றம் அதிகமாக இருக்கும். எனவே தோசை மாவை பிரிட்ஜ்ஜில் வைக்கும் போது பாத்திரத்தில் திறந்து வைக்காதீர்கள். முடிந்த வரை தோசை மாவிற்கு என்று டப்பாக்கள் பயன்படுத்துங்கள்.
அதே மாதிரி சீஸ், சாஸ் போன்றவற்றை அலுமினிய பேப்பரில் சுற்றி வையுங்கள். ஏனெனில் பாலாடை மிகுந்த துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
மீந்த உணவுகளை டப்பாக்களில் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் மூடி வையுங்கள்.
கறிவேப்பிலை, கீரைகள் மற்றும் கொத்தமல்லி தழைகளை அப்படியே போடாதீர்கள். இவைகள் சீக்கிரமாக அழுகி வாசனை ஏற்படுத்தும். இதை க்ளீன் செய்வதும் கஷ்டம். எனவே இலைகளை உருவி ஒரு கவரில் போட்டோ அல்லது டப்பாக்களில் போட்டோ பயன்படுத்தலாம்
உடைத்த தேங்காயையும் அப்படியே பிரிட்ஜில் வைத்தால் காய்ந்து அழுக ஆரம்பித்து துர்நாற்றம் வீசும். எனவே தேங்காயை ஒரு கவரில் போட்டு வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும்
இஞ்சியை கடையில் இருந்து வாங்கிய உடனே மண்ணுடன் பிரிட்ஜ்யில் வைக்காதீர்கள். அதை நன்றாக கழுவி லேசாக உலர வைத்து பிறகு பிரிட்ஜ்யில் டப்பாக்களை மூடாமல் காற்றோட்டமாக வையுங்கள். மூடினால் சீக்கிரமே பூஞ்சை வர ஆரம்பித்து விடும்.
ஒவ்வொரு வாரமும் பிரிட்ஜை சுத்தப்படுத்துங்கள். காய்கறிகள் அழுகி இருந்தால் நீக்குங்கள். காய்கறிகளை காய்கறி கூடையில் ஒரு துணி விரித்து போடுங்கள். இது காய்கறிகள் அழுகி போகாமல் இருக்க உதவும். உணவுக்கு ஒரு தட்டு, தோசைமாவு, பால் ஒரு தட்டு என்று தனித்தனியாக பிரித்து வையுங்கள்.
மல்லிகைப் பூ, வாசனை பூக்களை பிரிட்ஜ்யில் வைத்தால் ஒரு கவர் போட்டு அதை ஒரு டப்பாவில் வைத்து பிரிட்ஜ்யில் வையுங்கள். இல்லையென்றால் உணவுப் பொருட்கள் எல்லாம் பூ வாசம் வீச ஆரம்பித்து சாப்பிட முடியாமல் போய் விடும்.
பழங்களை ஒரு கூடையில் வைத்து காற்றோட்டமாக மூடாமல் வையுங்கள். மூடினால் சிக்கிரமே பூஞ்சை வர ஆரம்பித்து விடும். வெப்பநிலையை சரியான நிலையில் வையுங்கள் இல்லையென்றால் நுண்ணுயிர் பெருக்கத்தை உண்டாக்கும். உணவை உள்ளே சூடாக வைக்காதீர்கள். இதுவும் துர்நாற்றம் வீச காரணமாகிறது.
வெப்பநிலையை 4 முதல் 5 டிகிரி வரை (37-40 டிகிரி பாரன்ஹீட்) வைத்திருங்கள்.