உறக்கம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நாள் முழுவதும் ஓடி திரிந்து உழைத்து அலுத்து போன ஒவ்வொருவரும் விரும்பி நாடுவது நல்ல ஆழ்ந்த உறக்கத்தை தான். அனைவருக்குமே படுத்தவுடன் உறங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஏனோ என்னதான் முயற்சி செய்தாலும் உடனடியாக தூக்கம் வராது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு படுத்த உடன் தூங்குவதற்காக சில டிப்ஸ்களை பார்ப்போம்.
இம்சை அரசன் இன்சோம்னியா.. தூக்கமின்மை (Insomnia) ஏற்பட காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?
படுத்தவுடன் உறக்கம் வர என்ன செய்யலாம்:
- மாலை நேர வழக்கத்தில் சில மாற்றங்களை செய்து பாருங்கள். வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தல், சிறிது நேரம் தியானம் செய்தல், நல்ல புத்தகங்களை வாசித்தல், இனிமையான பாடல்களைக் கேட்டல் போன்ற மனதை இலகுவாக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். இவை உங்கள் மனதினை லேசாக வைத்திருப்பதோடு தேவையற்ற சிந்தனைகள் வராமல் தடுத்து சீக்கிரம் உறங்கச் செய்து விடும்.
- உறங்கச் சென்றவுடன் உங்கள் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றுகிறதோ அதனை எழுதி வைத்து விடுங்கள். சிலருக்கு மறுநாள் செய்ய வேண்டிய வேலைகள் நினைவில் வந்து கொண்டே இருக்கலாம் இப்படி உறங்கச் செல்லும் பொழுது உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை எழுதத் தொடங்குங்கள். செய்ய வேண்டிய வேலைகளை எழுதி வைத்துவிட்டால் அவற்றை தூக்கத்தின் பொழுது சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லாமலும் போய்விடும். எனவே கவலைகள் இன்றி உறங்கலாம்.
- உறங்கச் செல்லும் முன் நீல நிற ஒளியை தரக்கூடிய தொலைக்காட்சி, மடிக்கணினி, கைபேசி போன்றவற்றை ஒதுக்கி வைத்து விடுங்கள் உங்கள் படுக்கை அறையில் இவற்றை அனுமதிக்காதீர்கள்.
- தூங்கும் நேரத்தை நிர்ணயங்கள். தினமும் இத்தனை மணிக்கு தூங்க வேண்டும் என்று வழக்கமாக்கிக் கொண்டீர்கள் என்றால் உங்கள் உடல் அதற்கு ஏற்றார் போல் பழகிவிடும். அந்த நேரத்திற்கு உங்களுக்கு சரியாக தூக்கம் வர தொடங்கிவிடும். தூக்கத்தின் நேரம் மாறுபடும் பொழுது தான் சிக்கல் ஏற்பட தொடங்குகிறது எனவே எத்தனை மணிக்கு தூங்க வேண்டுமோ அத்தனை மணிக்கு உங்கள் உடலை பழக்க தொடங்குங்கள்.
- உங்கள் படுக்கை அறையை உறங்குவதற்கு தகுந்தார் போல் வசதியானதாக மாற்றுங்கள். அதிக அளவு விளக்குகள் வெளிச்சம் இல்லாத படி பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்த வெப்பநிலையில் அறையினை வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் அறையில் சத்தங்கள் ஏதும் கேட்காதபடி வைத்துக் கொள்ளுங்கள். விரும்பினால் உங்கள் அறையில் லாவண்டர் நறுமணத்தை பரவ விடுங்கள்.
- மாலை வேலைக்குப் பிறகு காப்பி எடுத்துக் கொள்வதை தவிருங்கள். கஃபைன் உறக்கத்தை தாமதப்படுத்தும்.
உறக்கம் உடலுக்கும் மனதுக்கும் தரக்கூடிய நல்ல ஓய்வு. உறக்கமின்மை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே ஆழ்ந்த தூக்கத்தை தவற விடாதீர்கள். இந்த டிப்ஸ்களை பின்பற்றி நல்ல உறக்கத்தை பெறுங்கள்.