இம்சை அரசன் இன்சோம்னியா.. தூக்கமின்மை (Insomnia) ஏற்பட காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

தூக்கம் என்பது ஒரு வரம். சிலருக்கு படுத்த உடனேயே தூக்கம் கண்களை சுழற்றிவிடும். சிலர் ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து உறக்கத்தை தழுவ தொடங்கி விடுவர். ஆனால் சிலருக்கு என்னதான் செய்தாலும் தூக்கம் என்பது வரவே வராது. இந்த தூக்கமின்மையை ( Insomnia) அலட்சியப்படுத்த வேண்டாம்.

insomnia

இப்போதெல்லாம் படுத்த உடனேயே தூக்கம் வருவது என்பது பலருக்கும் அரிதாகிப்போன விஷயம் ஆகிவிட்டது. நம் உடல் முழுவதும் உள்ள அனைத்து பாகங்களும் ஹார்மோன்களும் சரிவர இயங்க வேண்டும் என்றால் அதற்கு தூக்கம் மிகவும் அவசியம்.

நல்ல ஆழ்ந்த தூக்கம் இருந்தால் மட்டும் தான் உடல் மற்றும் மனது சுறுசுறுப்போடு இருக்கும்.

ஆனால் இன்று பலரோ நீண்ட நேரம் விழித்திருத்தல், இரவு தூக்கமே வரவில்லை என்று கவலைப்படுதல் போன்றவை அதிகரித்து உள்ளது.

Insomnia

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ( centres for disease control and prevention) கீழ்க்கண்டவாறு தூக்கத்தை அறிவுறுத்துகிறது.

  • பிறந்து மூன்று மாதங்கள் வரை உள்ள குழந்தைக்கு 14 முதல் 17 மணி நேர தூக்கம் அவசியம்
  • 4 முதல் 12 மாத குழந்தைக்கு 12 இல் இருந்து 16 மணி நேர தூக்கமும்.
  • ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் உள்ள குழந்தைக்கு 11 – 14 மணி நேர தூக்கமும்.
  • மூன்று முதல் ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு 10ல் இருந்து 13 மணி நேர தூக்கம் தேவை எனவும்.
  • 6 வயதில் இருந்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 9லிருந்து 12 மணி நேர தூக்கத்தையும்.
  • 13 – 18 வயது வரை உள்ள பதின்ம வயதினருக்கு 8 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேர தூக்கத்தையும்.
  • 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 7ல் இருந்து 9 மணி நேர தூக்கம் அவசியம் எனவும் தூக்கத்தின் அளவுகளை அறிவுறுத்துகிறது.

தூக்கமின்மை அறிகுறிகள்:

  • அதிகாலையில் திடீரென விழிப்பு வந்து அதன் பின் மீண்டும் தூங்க இயலாமல் இருப்பது.
  • இரவு தூங்காமல் நீண்ட நேரம் விழித்தே இருப்பது.
  • இரவு தூக்கத்தில் அடிக்கடி விழிப்பது.
  • தூங்கி எழுந்த பின்பும் களைப்புடனே காணப்படுவது.

தூக்கமின்மை காரணங்கள்:

sleepless

இரவு உணவினை போதுமான அளவுக்கு மேல் அதிக அளவு எடுத்துக் கொண்டால் அது செரிமானத்தை பாதித்து தூக்கமின்மைக்கு காரணமாகிறது. அதிக காரமான உணவு எடுத்துக் கொள்ளும் பொழுதும் தூக்கமின்மை ஏற்படுகிறது.

பகல் பொழுதில் நம் உடலுக்கு தேவையான அளவு இயக்கம் கொடுக்காமல் ஓய்வாகவே இருப்பவர்களுக்கு தூக்கம் தடைப்படும். போதிய உடல் இயக்கம் இல்லாமல் இருந்தால் அது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.

உறங்கச் செல்வதற்கு முன்பு மொபைல் டிவி பார்ப்பது அல்லது உறக்கம் வரவில்லை என்று நீண்ட நேரம் மொபைலை பார்ப்பதோ தூக்கமின்மையை உண்டாக்கும்.

உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு பெரிய வியாதிகள் இருப்பவர்களுக்கும் வயதானவர்களுக்கு உடலில் ஏதேனும் வலி இருந்தாலும் உடல் உபாதையினால் தூக்கமின்மை உண்டாகும்.

சிலர் வாழ்வில் நடக்கும் துன்பங்களையும் அவர்களது கஷ்டங்களையும் நினைத்து தேவையற்ற மன உளைச்சல்களில் இருக்கும் பொழுதும் தூக்கம் எளிதில் வராது.

இரவு தூக்கம் வரவில்லை என்று பகலில் அதிக நேரம் உறங்குவது கூடாது. பகல் பொழுதில் அரை மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு இரவு தூக்கம் என்பது அரிதான விஷயமாகிவிடும்.

தூக்கமின்மை காரணமாக உண்டாகும் விளைவுகள்:

  • உயர் ரத்த அழுத்தம்
  • பக்கவாதம்
  • இதய நோய்
  • நீரிழிவு நோய்
  • ஆஸ்துமா
  • அதீத உடல் பருமன்
  • மனச்சோர்வு அல்லது மன அழுத்தம்
  • குழப்பம்

சிலருக்கு அதீத மகிழ்ச்சியின் போது கூட அந்த மகிழ்ச்சியான நினைவினை மீண்டும் மீண்டும் அசைபோடும் போது தூக்கம் வராது. அது இயல்புதான். என்றாவது ஒருநாள் தூக்கமின்மை ஏற்பட்டால் அது குறித்து கவலை வேண்டாம். தூக்கமின்மை மாத கணக்கிலோ வருட கணக்கிலோ தொடரும் பொழுது நிச்சயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews